

கரோனா ஊரடங்கால் சுபநிகழ்ச்சிகள் விமர்சியாக நடக்காததால் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வாழை இலைகள் வெட்டப்படாமல் மரத்திலேயே கருகி வருகின்றன.
தேவகோட்டை அருகே இளங்குடி பகுதியில் அதிகளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு வெட்டப்படும் வாழை இலைகள், வாழைத்தார்கள் தேவகோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கரோனா ஊரடங்கு தொடர்கிறது.
இதனால் திருமணம், காதனிவிழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள் விமர்சியாக நடக்கவில்லை. கரோனா அச்சத்தால் உணவகங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இதனால் வாழை இலை தேவை குறைந்துள்ளது. வாங்க ஆளில்லாததால் வாழை இலைகளை வெட்டாமல் விவசாயிகள் அப்படியே மரத்திலேயே விட்டுவிட்டனர்.
கடந்த சில வாரங்களாக வீசிய காற்றில் இலைகள் கிழிந்தும், கருகியும் வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து இளங்குடியைச் சேர்ந்த விவசாயி கணேசன் கூறியதாவது: மூன்று ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளேன். ஊரடங்கில் விவசாய பணிகளுக்கு தடை இல்லை என்று அரசு அறிவித்தாலும், சுபநிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள் விமர்சியாக நடக்காததால் வாழை இலையை விற்பனை செய்ய முடியவில்லை.
இதனால் வாழை விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வாழை இலைகள் கருகி வருவதை பார்த்து கண்ணீர் விடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதனால் அரசு வாழை விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், என்று கூறினார்.