

விநாயகர் சதுர்த்திக்காக கோயில்களில் புதிய சிலைகளை வைக்கக் கூடாது என்று தேனி ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தலைமை வகிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வி முன்னிலை வகித்தார்.
ஆட்சியர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும். ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் பொது இடங்களில் சிலைகளை வைத்து விழா நடத்தக் கூடாது.
சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ நீர்நிலைகளில் கரைக்கவோ கூடாது.
ஒலிபெருக்கி, போர்டுகள், சுவர்விளம்பரம், பேனர் உள்ளிட்டவற்றிற்கும் அனுமதி கிடையாது. பண்டிகை கொண்டாட்டத்திற்காக பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசமும் அணிய வேண்டும்.
சிறிய திருக்கோவில் வழிபாட்டிற்கு அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. இதன்படி இங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து வழிபடலாம். இங்கு புதியதாக விநாயகர் சிலை அமைக்கக் கூடாது.
இந்த நிபந்தனைகளை கடைபிடித்து வரும் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், பெரியகுளம் சார் ஆட்சியர் ச.சினேகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) தாக்ரே சுபம், உத்தமபாளையம் கோட்டாட்சியர்(பொறுப்பு) கார்த்திகாயினி மற்றும் இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.