தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வழக்கு: உயர் கல்விச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வழக்கு: உயர் கல்விச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் 5 ஆண்டுக்கு ஒரு முறை கல்லூரிகள் செயல்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்கல்வித் துறை முதன்மை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாகர்கோவிலை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்து 5 அல்லது 3 ஆண்டுக்கு ஒருமுறை அறிக்கை தயார் செய்து அதனை மாநில உயர் கல்விச் செயலருக்கு அனுப்ப வேண்டும்.

அந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் கல்லூரிகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் அறிவிக்கப்படும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எந்த பல்கலைக்கழகங்களும் இதுபோன்ற அறிக்கை வழங்கியதாக தெரியவில்லை. எனவே அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை மாநில உயர்கல்வி செயலரிடம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக உயர் கல்வித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை செப். 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in