

தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியினை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, சு.திருநாவுக்கரசர் எம்.பி. இன்று (ஆக.18) வெளியிட்ட அறிக்கை:
"சென்னையில் பெருகி வரும் மக்கள்தொகையால் சாலைகளில் நெருக்கடி, தினந்தோறும் சென்னை வந்து போகும் லட்சோப லட்ச மக்கள் இவற்றால் ஏற்பட்ட சிரமங்களை குறைக்கவும், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திருச்சியை இரண்டாவது தலைநகராக உருவாக்குவேன் என்று அறிவித்தார்.
திருச்சியை இரண்டாது தலைநகரமாக்க வேண்டுமென்கிற கோரிக்கையை எம்.ஜி.ஆருக்குப் பிறகு முதன் முதலில் நான்தான் அரசுக்குக் கோரிக்கையாக வைத்தேன். திருச்சி மாநகர் தமிழகத்தின் இதயம் போல் மத்திய பகுதியாக விளங்குவதாகும். கன்னியாகுமரி முதல் தமிழகத்தின் நான்கு எல்லைகளில் இருந்தும் திருச்சிக்கு சுமார் நான்கு மணி நேரத்தில் சாலை வழியாக வந்து சேர்ந்துவிட முடியும்.
சென்னையின் நெருக்கடியை தவிர்க்கவும், மக்களுக்கு எளிதாக வந்து போகும் விதத்திலும் அரசின் பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்கள் கட்டப்படுபவை திருச்சியில் இனிமேல் கட்டப்பட வேண்டும் என்பதே கோரிக்கை. இங்கு இடவசதி, தண்ணீர் வசதி, சாலை வசதி, விமான வசதி, ரயில் வசதி, கல்வி மற்றும் மருத்துவ வசதி இப்படி துணை நகரத்திற்கு தேவையான அனைத்தும் திருச்சி மற்றும் திருச்சியையொட்டியே தாராளமாக உள்ளன.
எனவே, இவற்றையெல்லாம் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். சிந்தித்தும், அதிகாரிகள், பல்துறை விற்பன்னர்கள் அனைவரையும் கலந்தாலோசித்தும்தான் திருச்சியை இரண்டாம் தலைநகராக்க முடிவு செய்து அறிவித்தார். அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் விருப்பத்தை அவரால் நிறைவேற்ற இயலவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள திருச்சியோ, மதுரையோ, கோவையோ, கடலூரோ, நெல்லையோ, சேலமோ இப்படி நகரங்கள் அனைத்தும் முக்கியமானவையே. மற்றபடி எல்லா ஊரும் ஒன்றே மதுரையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. திருச்சியை நான் குறிப்பிடுவது தமிழ்நாட்டின் மையப்பகுதி என்பதாலும், மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டும்தான்.
அரசியல் தாண்டி பூகோள அமைப்பின் அடிப்படையில் மக்கள் வசதியை மனதில் கொண்டு தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியினை இரண்டாம் தலைநகருக்கான இடமாக தேர்வு செய்து, பணிகளை முதல்வர் தொடங்கினால் தமிழக மக்கள் பெரிதும் வரவேற்பார்கள். தமிழக முதல்வருக்கு இது எனது கனிவான வேண்டுகோளாகும்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.