

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் என இதுவரை 144 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வர் கே.வனிதா, 'இந்து தமிழ்' நாளிதழிடம் இன்று கூறியதாவது:
"திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் 100 பேருக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. இதில், 22 பேரை தவிர எஞ்சிய அனைவருக்கும் அறுவை சிகிச்சை மூலமாகவே குழந்தைகள் பிறந்தன. பிறந்த குழந்தைகளில் 98 பேருக்குக் கரோனா தொற்று இல்லை. கரோனா தொற்று கண்டறியப்பட்ட 2 குழந்தைகளும் சிறந்த சிகிச்சையால் குணமடைந்தன. சிகிச்சை முடிந்து 100 தாய்மார்களும், அவர்களது குழந்தைகளும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சை காலத்தில் குழந்தைகள் 100 பேருக்கும் தாய்ப்பால் மட்டுமே புகட்டப்பட்டது.
மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட வெளியிடங்களில் குழந்தை பெற்ற கர்ப்பிணி பெண்கள் 44 பேரும், அவர்களது குழந்தைகள் 44 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். இதில், ஒரு குழந்தைக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அந்தக் குழந்தையும் மற்றும் குழந்தைகள் 44 பேரின் தாய்மார்களும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.
இதன்படி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களில் தாய்மார்கள் 144 பேர் மற்றும் சிசுக்கள் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பாதித்த கர்ப்பிணி பெண்களிடமிருந்து, பிரசவிக்கும் குழந்தைகளுக்கு தொற்று பரவாத வகையில் மிகவும் சவாலான பிரச்சினைக்கு திருச்சி அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு மருத்துவர்கள் சிறந்த சிகிச்சை அளித்துள்ளனர்.
கரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்டால் கர்ப்பிணி பெண்களின் அருகில் செல்வதை குடும்பத்தினர் தவிர்க்க வேண்டும். உடனடியாக பரிசோதனை செய்து கொள்வதுடன், அதன் முடிவு வரும் வரை தனித்திருக்க வேண்டும். அதேபோல், கர்ப்பிணி பெண்கள் உட்பட யாரும் தேவையின்றி வெளியே வரக்கூடாது. வெளியே வரும்பட்சத்தில் முகக்கவசம் அணிந்திருப்பதுடன், அவ்வப்போது கைகளை நன்றாக கழுவ வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.