போராட்டத்தில் வெற்றி என்றாலும் துப்பாக்கிச் சூட்டுக்கு அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்: ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து  கமல் 

போராட்டத்தில் வெற்றி என்றாலும் துப்பாக்கிச் சூட்டுக்கு அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்: ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து  கமல் 
Updated on
1 min read

ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்றுள்ள மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் போராட்டம் இத்துடன் முடியவில்லை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:

“மக்களின் வலிமையான குரலுக்கு முன்னால், வல்லரசுகளும் தலைவணங்கித்தான் தீர வேண்டுமென நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தனது சிறப்புமிகு தீர்ப்பால் அனைவருக்கும் அறிவுறுத்தியிருக்கிறது.

ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் திரண்ட பொதுமக்களுக்கும், அரசின் அடக்குமுறையில் உயிரிழந்த தன் குடும்பத்து உறுப்பினர்களுக்கும், மரியாதை செலுத்த வேண்டிய நேரமிது. போராட்டக்களத்தில் நிற்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு எனது நன்றிகள்.

இந்த தீர்ப்பு கொண்டாடக்கூடிய ஒன்று என்றாலும், இன்னும் அந்தப் போர் முடிந்து விடவில்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. துப்பாக்கிச் சூடு நடத்திய அரசு, தன் பயங்கரவாத செயலுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இன்று கிடைத்த நீதியை தக்க வைக்க நாம் சோர்வின்றி தொடர்ந்து போராட வேண்டும். மக்களுக்கான நீதி இன்று உறுதியாகி இருக்கின்றது.

ஸ்டெர்லைட், மக்களின் நில, நீர் வளத்தையும், கனிம வளத்தையும் அபகரிக்கும் செயலுக்கு மக்கள் நீதி மய்யம் தனது வலுவான எதிர்ப்பினை தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கும்.

களத்தில் நானும் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தொடர்ந்து இருப்போம்”.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in