தமிழகம் முழுவதும் ரூ.296 கோடியில் நுண்ணீர் பாசனத் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ரூ.296 கோடியில் நுண்ணீர் பாசனத் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
Updated on
2 min read

தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டில் ரூ.296 கோடியில் 1.29 லட்சம் ஏக்கரில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஒரு அறிக்கையை படித்தார். அவர் கூறியதாவது:

அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி 127.95 லட்சம் மெட்ரிக் டன்னை எட்டி சாதனை படைத்துள்ளது. இது திமுக ஆட்சியைவிட 55 சதவீதம் அதிகமாகும். கடந்த 4 ஆண்டுகளில் 1.72 லட்சத்துக்கும் அதிகமான வேளாண் இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு ரூ.245 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நெல் நடவு இயந்திரங்கள், டிராக்டர்கள் என 5 ஆயிரத்து 683 வேளாண் கருவிகள் வாங்க ரூ.80 கோடி மானியம் வழங்கப்படும்.

3 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கரில் வேளாண் பயிர்களில் நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்கான செயல் விளக்கங்கள் அளிக்கப்படும். இதற்காக ரூ. 65.30 கோடி செலவிடப்படும். தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமைக்கு ரூ. 25 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நெல், சிறு தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களுக்கு ரூ.29.67 கோடி உற்பத்தி மானியம், விநியோக மானியம் வழங்கப்படும்.

அரசு விதைப் பண்ணைகள், தோட்டக்கலை பண்ணைகள் ரூ.15 கோடியில் மாதிரிப் பண்ணைகளாக தரம் உயர்த்தப்படும். பயிறு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் நவீன யுக்திகளை செயல்படுத்த ரூ.10.57 கோடி செலவிடப்படும். பசுமைக் குடில், நிழல் வலை குடில்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட சூழலில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய ரூ.56.76 கோடி ஒதுக்கப்படும்.

வெளிநாட்டு சுற்றுலா

நுண்ணீர் பாசன முறையினால் நீரை சேமிக்கவும், பாசனப் பரப்பை அதிகப்படுத்தவும், நீர்வழி உரமிடல் மூலம் உரத் தேவையைக் குறைக்கவும் முடியும். நடப்பாண்டில் ரூ.296 கோடியில் 1.29 லட்சம் ஏக்கரில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும். நுண்ணீர் பாசனத்துக்காக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்.

இஸ்ரேல் போன்ற நாடுகளில் உயரிய அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பயிர் சாகுபடியில் அதிக மகசூல் பெறுகின்றனர். அதுபோன்ற தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள 100 விவசாயிகள் வெளிநாடுகளுக்கும், 10 ஆயிரம் விவசாயிகள் பிற மாநிலங்களுக்கும் கல்விச் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

நகர்ப்புற மக்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்களே உற்பத்தி செய்ய காய்கறி சாகுபடிக்கு தேவையான இடு பொருட்கள் அடங்கிய ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற தொகுப்பு வழங்கும் திட்டம் சென்னை, கோவை மாநகராட்சிகளில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. திருச்சி, மதுரை மாநகராட்சிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கப்படும். இதற்காக ரூ.5.37 கோடி ஒதுக்கப்படும்.

இயற்கை வேளாண் முறையை ஊக்குவிக்க ரூ.8 கோடி ஒதுக்கப்படும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகளுக்காக ரூ.22.95 கோடியில் தங்கும் விடுதிகள் கட்டப்படும். மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, கறவை மாடுகள், ஆடுகள் வளர்ப்புத் திட்டத்துடன் இணைந்த ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் ரூ.48.50 கோடி செலவிடப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in