

வாஸ்துக்காக புதுச்சேரி அரசு அலுவலக பிரதான வாயில் முன்பு அதிகாரி சுவர் எழுப்பியுள்ளார். அதுவும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கழிப்பிட வசதி செய்ய ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து செய்தது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரிய வந்துள்ளதால் துணைநிலை ஆளுநர், முதல்வரிடம் இன்று புகார் தரப்பட்டுள்ளது:
புதுச்சேரி ஜவஹர் நகரில் செயல்பட்டு வரும் நகர மற்றும் கிராம ஒருங்கமைப்புத்துறை (Town and country planning) மேற்குப்புறம் பிரதான வாயிலும், வடக்குப்புறம் சிறிய வாயிலும் கொண்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில், திடீரென மேற்குப்புறம் இருந்த பிரதான வாயில் இருந்த சுவடே தெரியாமல் சுவர் எழுப்பி மறைத்துவிட்டனர்.
இதையடுத்து, ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல்களை பெற்று அதை புகார் மனுவாக இன்று (ஆக.18) முதல்வரிடம் அளித்தார்.
அதுதொடர்பாக அவர் கூறுகையில், "நகர மற்றும் கிராம ஒருங்கமைப்புத்துறை அலுவலகம் கட்டியது முதல் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மேற்குப்புறம் இருந்த வாயிலின் வழியே உள்ளே சென்று வடக்குப்புறம் உள்ள வாயில் வழியே வெளியே செல்லும்படியாக செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது உயர் அதிகாரி ஒருவர் இந்த அலுவலகத்திற்கு வந்தவுடன் வாஸ்து சரியில்லை என கூறி அவரது விருப்பப்படி மாற்றியுள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் கேட்டதற்கு அவர்கள், பிரதான மேற்கு வாயிலை அமைக்க நகர அமைப்பு குழுமத்திடம் எந்தவித அனுமதியும் பெறாமல் மாற்றுத்திறனாளிகளுக்குக் கழிப்பிட வசதி செய்ய ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூ.4.70 லட்சம் செலவு செய்து மதில் சுவர் எழுப்பப்பட்டது என தகவல் அளித்துள்ளனர்.
மேற்குப்புற வாயிலில் நன்றாக இருந்த இரும்பு கிரில் கதவை அகற்றிவிட்டு அந்த வாயிலை சுவர் எழுப்பி மறைத்து, வடக்குப்புறம் உள்ள சிறிய வாயிலை மட்டும் பயன்படுத்தும் வண்ணம் செய்துள்ளார். இதன்மூலம் புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் தங்களின் விருப்பம்போல் செயல்பட்டு வருவது தெளிவாகிறது.
எனவே, அரசு அலுவலகத்தைத் தன் சொந்த வீடு போல், தன் விருப்பத்திற்கு வாயிலை மாற்ற அமைத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த செலவின தொகையை அவரிடமே வசூலிக்கவும், முன்பு இருந்தது போல் மேற்குப்புற வாயிலை திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று முதல்வர், துணைநிலை ஆளுநர், தலைமைச்செயலாளருக்கு மனு தந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.