Published : 18 Aug 2020 01:33 PM
Last Updated : 18 Aug 2020 01:33 PM

கரோனா அதிகம் பாதித்துள்ள தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரிக்கை வைக்கவேண்டும்: முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை

நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக அரசு இணைத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவாக, நீட் தேர்வு தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது, அரசு உடனடியாக மத்திய அரசோடு தொடர்பு கொண்டு, மிக அதிகளவில் கரோனாவினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

“மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு செப்டம்பர் 13 -ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற நிலையில் நுழைவுத் தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி 11 மாநிலங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் வாதாடிய தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, ‘நீட் தேர்வு நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை, நீட் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும், நீட் தேர்வு நடத்துவதற்குரிய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் , ‘நீட் தேர்வை தள்ளி வைக்க முடியாது, அரசு வழக்கறிஞரின் கருத்தை ஏற்றுக் கொண்டு, தேர்வை ஒத்தி வைக்கக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் நீட் தேர்வில் 15 லட்சத்து 93 ஆயிரம் மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்;டில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். கரோனா தொற்று காலத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. நகரங்களில் மாணவர்களுக்கு இருக்கிற வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதற்கு எந்த வசதியும் இல்லை. நீட் தேர்வு நடத்தப்பட்டால், கடுமையாக பாதிக்கப்படப்போவது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களே ஆகும்.

அதே நேரத்தில் கணக்காயர் தேர்வு மற்றும் சிபிஎஸ்இ வகுப்புகளுக்கான தேர்வுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீட் தேர்வை நடத்துவதில் மத்திய பாஜக அரசு காட்டிய உறுதியின் காரணமாக உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை தள்ளி வைக்க முடியாது என்று உறுதியாக கூறிவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் ஏற்படுகிற பாதிப்பிலிருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்கு மத்திய பாஜக அரசு உரிய தீர்வுகளை காண முயல வேண்டும். அந்த வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் நடைமுறைக்கு வருகிற நீட் தேர்வை ரத்து செய்வதற்குரிய முயற்சிகளை மீண்டும் மேற்கொள்வதற்கு, பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டும்.

நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக அரசு இணைத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவாக, நீட் தேர்வு தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பாஜக அரசு தான் காரணமாகும்.

அதைத் தடுக்கத் தவறிய எடப்பாடி அரசு உடனடியாக மத்திய அரசோடு தொடர்பு கொண்டு, மிக அதிகளவில் கரோனாவினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x