

ஊட்டி, காந்தல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு குறுகலான தெருவில் அமைந்திருக்கிறது புகைப்படக் கலைஞர் மதிமாறனின் வீடு. சமீபத்தில் பெய்த மழையில் இடிந்துபோன வீடுகளில் இவரது வீடும் ஒன்று. வீட்டின் முன் அறை சேதமடைந்து கிடக்கிறது. அடுத்த அறைக்குள் நுழைந்தால் நான்கு புறச் சுவர்கள் முழுவதும் புகைப்படங்கள் நிரம்பி வழிகின்றன. ஜன்னல், கதவுகளில்கூட அழகழகாய்ப் புகைப்படங்கள். அத்தனையும் நீலகிரி மலைகளின் இயற்கைக் காட்சிகள், நீலகிரி வாழ் பழங்குடிகளின் கலை, கலாச்சாரம், பண்பாடுகளைச் சித்தரிக்கும் படங்கள்.
மேளம் அடித்தபடி சிறுவர்கள், கொம்பூதியபடி ஆண்கள், காதோலைக் கம்மல் சாற்றிய வயோதிகப் பெண்கள், மரங்களுக்குப் பூஜை செய்யும் பூசாரிகள், தொழுது நிற்கும் பழங்குடிகள் என ஒவ்வொரு படமும் மனதைக் கவர்கிறது. இந்தப் படங்களைக் காண அக்கம்பக்கத்தவருக்கு அழைப்பு விடுக்கிறார் மதிமாறன். அவர்களும் தம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்து புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, “ஊட்டியில் இருக்கிறோம்னுதான் பேரு. இந்த இடங்களை நாங்களே பார்த்ததில்லை” என வியந்து செல்கிறார்கள்.
அவர்களின் வியப்பை ரசித்தபடியே நம்மிடம் பேசிய மதிமாறன், “புகைப்படங்களைப் பார்வையிட நேற்று முன்தினம் வந்தவர்கள் 18 பேர். நேற்று வந்தவர்கள் 28 பேர். இன்று காலையிலேயே 16 குழந்தைகள் வந்து சென்றிருக்கிறார்கள். நாளை உலகப் புகைப்பட தினம். எத்தனை பேர் வருவாங்கன்னு தெரியலை. ஆனா, எங்க வீட்டுப் பக்கம் உள்ளவங்களை எல்லாரையும் இதைப் பார்க்க வச்சிடணும்னு நினைச்சிருக்கேன்” என்கிறார்.
இவர் கடந்த 12 ஆண்டுகளில் 6,000-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தியவர். பள்ளி - கல்லூரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் எனப் பல்வேறு இடங்களில் கண்காட்சியை நடத்தியிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் முதல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வரை பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஏதாவது ஒரு இடத்தில் புகைப்படக் கண்காட்சிகளை நடத்திவந்த இவர், ஒவ்வொரு உலகப் புகைப்பட தினத்தன்றும் புகைப்படக் கண்காட்சி நடத்தாமல் இருந்ததில்லை. கரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த ஆண்டு அதற்கான சாத்தியமே இல்லை என்றாகிவிட்டது. இந்நிலையில், உலக புகைப்பட தினத்தன்று புகைப்படக் கண்காட்சி நடத்தாமல் விட முடியாது என்று தீவிரமாக யோசித்தவர் அதைத் தன் வீட்டிலேயே நடத்த முடிவெடுத்துவிட்டாராம்.
இதுகுறித்து இவர் மேலும் கூறுகையில், “இது எனக்கே ஒரு புது அனுபவம். வீட்டின் முன்புற அறையில்தான் சாமி படங்கள், குடும்ப புகைப்படங்கள் இருந்தன. அதை எல்லாம் இதற்காக கழற்றி எடுத்துவிட்டேன். இந்த சின்ன அறைக்குள்ளே மட்டும் 300 புகைப்படங்கள் வைத்திருக்கிறேன். இங்கு இருக்கும் புகைப்படங்கள் எல்லாமே நீலகிரி மாவட்டம் சம்பந்தப்பட்டவை.
நீலகிரியில் தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பனியர், காட்டுநாயக்கர் என ஆறு வகைப் பழங்குடிகள் வசிக்கிறார்கள். அவர்களுக்குள் பல்வேறு உட்பிரிவுகள் இருந்தாலும், ஒருவர் இன்னொருவர் ஊருக்குப் போக மாட்டார்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள மாட்டார்கள். இவர்களுக்குள் பயம் அதிகம். அவர்கள் இவர்களை ஏதாவது செஞ்சிருவாங்களோ என்கிற எண்ணம் இன்னமும் இருக்கு. அதனால இந்த மாதிரிப் புகைப்படங்கள் வழியாகத்தான் பிற பழங்குடியினரின் கலாசாரத்தை அவர்கள் பார்க்கிறார்கள்.
பட்டியலின / பழங்குடியினப் பள்ளிக்கூடங்களில் இது மாதிரிப் புகைப்படக் கண்காட்சிகளை வைக்கும்போது மலைவாசிக் குழந்தைகளுக்கு இந்தப் பயம் தெளிகிறது. நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. அதேபோலத்தான் இங்கே எங்களுடைய வீட்டுக்கு அருகில் இருக்கும் பல பேருக்கே நீலகிரியில கெத்தையம்மன் திருவிழா, ஜெகதளா ஹெப்பா, மைனலா கெட்டா தீமிதித் திருவிழா பற்றி எல்லாம் தெரியவில்லை. இது எல்லாம் எங்கே நடக்கிறது என்று என்னைக் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை புகைப்படங்களை எல்லோரும் பார்க்க வேண்டும். அறியாத விஷயங்களை அதன் மூலமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையில் மண் சரிவு ஏற்பட்டு, மதிமாறன் வசித்துவந்த பழைய வீடு விரிசல் கண்டது. அதைச் செப்பனிடவே இத்தனை நாட்கள் ஆகிவிட்டதாம். அதற்கே பொருளாதார வசதியில்லாத சூழலில் இப்படியொரு புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்.
வீட்டில் இவரும், இவர் தங்கை, தங்கையின் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் இந்தக் கண்காட்சியைத் தொந்தரவாகக் கருதவில்லையா எனக் கேட்டபோது, “புகைப்படங்களைக் காட்சிக்கு வைப்பதைவிடப் பெரிய சந்தோஷம் எனக்கு வேற எதுவும் இருக்க முடியாதுன்னு அவங்களுக்குத் தெரியும் சார்” என்று சொல்லி விடைகொடுத்தார் மதிமாறன்