

கரோனாவால் இறந்தவர் உடலை புதைக்குழிக்குள் தள்ளிய அவமதிப்பு விவகாரம் தொடர்பாக ஆறு வாரத்துக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர், புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது கரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கோபாலன் கடை மயானத்துக்கு கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு கவச உடை அணிந்த பணியாளர்கள் நால்வர், ஆம்புலன்ஸில் இருந்து உடலைத் தூக்கி வந்தனர். அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த குழி அருகே வந்தனர். அப்போது குழிக்குள் சடலத்தைக் கயிறு கட்டி இறக்காமல் தள்ளி விட்டது போல் திரும்பினர்.
கரோனா தொற்று பாதித்தவரின் உடலை அலட்சியமாக சவக்குழியில் வீசி செல்வதாக வீடியோக்கள் இணையத்தில் பரவின. இச்சம்பவத்தில் தொடர்புடைய உள்ளாட்சித்துறை ஊழியர்கள் இருவர், சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் என மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அதையடுத்து, கரோனாவால் இறப்போரை அடக்கம் செய்யும் பணியில் தற்போது தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இவ்விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இப்புகார் மனுவை அனுப்பிய மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (ஆக.18) கூறுகையில், "கரானாவால் இறந்தவர்களின் உடல்களைக் கையாளுவது குறித்து மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் அப்பட்டமாக கடைபிடிக்கப்படாமல் மீறப்பட்டன. இறந்தவர்களின் உடல்களைக் கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பும் மீறப்பட்டது.
இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், சுகாதாரத் துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தோம்.
மேலும், கடந்த ஜூன் 7 ஆம் தேதி அன்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் விரிவான புகார் மனு அனுப்பினோம்.
இப்புகாரைப் பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், அப்புகார் மனுவை அனுப்பி வைத்து அதன்மீது 6 வாரக் காலத்துக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது" என்று தெரிவித்தார்.