

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மத்திய அமைச்சராகவும், திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்த மறைந்த முரசொலி மாறனின் 87-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் நேற்று கொண்டாடினர்.
சென்னை கோடம்பாக்கம் முரசொலி நாளிதழ் அலுவலக வளாகத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட முரசொலி மாறன் படத்துக்கும் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.