

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கின் போது, ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் சேவையை ‘சண்டே ஏஞ்சல்’ முகநூல் நண்பர்கள் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். தளர்வில்லா ஊரடங்கு அன்று அனைத்து கடைகளும் அடைக்கப்படுவதால், வீதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உணவு கிடைப்பதில்லை. இதனால் அன்று முழுவதும் அவர்கள் பசியோடு தவித்துக்கொண்டிருக்க வேண்டிய பரிதாப நிலை உள்ளது. இதை போக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமைதோறும் ஆதரவற்றோரின் பசிபோக்கும் சேவையை சன்டே ஏஞ்சல் முகநூல் நண்பர்கள் குழுவினர் செய்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்களை கொண்டுவந்து, சாலையோரம் உள்ளஆதரவற்றோருக்கு வழங்குகின்றனர்.
இந்த குழுவைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் நிஷித் ஆகியோர் கூறும்போது, “கடந்த 2 ஆண்டுகளாக விடுமுறை நாட்களில் திருநெல்வேலி டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை, என்ஜிஓ காலனி பகுதிகளில் உணவு வழங்கி கொண்டிருக்கிறோம். எங்கள் குழுவில் உள்ளவர்கள் இதற்கான உதவிகளை செய்துவருகிறார்கள். வீடுகள் இல்லாமல் வீதிகளில் ஆதரவற்று இருப்போருக்கு உணவு வழங்குகிறோம். கரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருந்தபோது பலரும் இவ்வாறு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினர். நாங்கள் தடையின்றி ஞாயிற்றுக்கிழமைகளில் உணவு வழங்கி வருகிறோம்” என்றனர்.