அனைத்து மாவட்ட மக்களும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் சென்னை வர இ-பாஸ் பெறுங்கள்: மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

அனைத்து மாவட்ட மக்களும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் சென்னை வர இ-பாஸ் பெறுங்கள்: மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
Updated on
1 min read

அத்தியாவசிய, நியாயமான காரணங்களுக்காக மட்டும் சென்னை வர இ-பாஸ் கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்து வந்தது. மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கைகளால் தினமும் புதிய தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1000-க்கும் கீழ் குறைந்திருந்தது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தொற்று 1000-க்கு மேல் அதிகரித்துள்ளது. இதனிடையே இன்று முதல் மதுக்கடைகளும் திறக்கப்படுகின்றன. இ-பாஸ் பெறுவதில் இருந்த சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாஸ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சென்னை நோக்கி வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்வதும் நேற்று அதிகரித்திருந்தது. இதனால் சென்னையில் மேலும் தொற்று அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்துக்குள் மாவட்டம்விட்டு மாவட்டம் செல்வதற்கான எளிமைப்படுத்தப்பட்ட, கணினி வழியாக தானாக இ-பாஸ் ஒப்புதல்வழங்கும் சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

இது பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும். அனைத்துமாவட்ட மக்களும் சென்னைக்குள்நுழைய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வசதியை நியாயமான, மிகவும் அத்தியாவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்தி மாநகராட்சியின் கரோனாவுக்கு எதிரான போருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in