Published : 18 Aug 2020 07:27 AM
Last Updated : 18 Aug 2020 07:27 AM

‘தாய்மண்ணே வணக்கம்’ இணையவழி சந்திப்பு: வேளாண்மை செழித்தால் மக்கள் வாழ்வும் செழிக்கும் அமெரிக்காவில் வாழும் தமிழ் குடும்பங்கள் பெருமிதம்

சென்னை.

ஊரடங்கு காலத்தில் மக்களை இணைக்கின்ற ஒரே வழியாக இருக்கும் இணையவழி மூலமாக பல்வேறு நிகழ்வுகளை ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் கல்வியாளர்கள் சங்கமம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ‘லேக் வியூ’ இயற்கைவேளாண்மை குழுவினருடன் ‘தாய்மண்ணே வணக்கம்’ எனும்விவசாயத்தில் அசத்தும் அமெரிக்கவாழ் தமிழ் குடும்பங்களுடனான இணைய வழி சந்திப்பு கடந்த 15-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வாழும் தமிழ் மக்கள் ஒரு வாட்ஸ்-அப் குழுவாகஇணைந்து, தங்களுடைய வீடுகளில் தோட்டம் அமைத்ததோடு, மூலிகைத் தோட்டம், இயற்கைவேளாண்மை என செயல்படுத்திவரும் அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வை ஒருங்கிணைத்த எழுத்தாளரும், ஆசிரியருமான சிகரம் சதிஷ்குமார் பேசும்போது, “இந்த தேசத்தின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தை, அமெரிக்காவில் இருந்தபோதும் மறக்காமல் முன்னெடுத்திருக்கும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. மாணவர்களையும் மரங்களையும் நன்றாக வளர்த்துவிட்டால் வருங்காலம் சிறப்பானதாக இருக்கும். அந்த வகையில் குழந்தைகளையும் இந்த வீட்டுத் தோட்ட முயற்சிகளில்ஈடுபடுத்தியிருப்பது போற்றுதலுக்குரியது” என்றார்.

கவிஞரும் எழுத்தாளருமான தங்கம்மூர்த்தி பேசும்போது, “தமிழகத்தில், நாட்டில் நாங்கள் தொலைத்துவிட்டதை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். பெரும் தொற்று காலத்தில் மூலிகைகளின் பயனை உணர்ந்து, அதைவீடுகளிலேயே நீங்கள் விளைவிப்பது உலகத்துக்கே முன்னுதாரணமான செயலாகும்” என்று பாராட்டினார்.

தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேசும்போது, “தமிழ் மூலிகை மருந்துகளுக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்திஉள்ளது என்பதை உலக மருத்துவர்கள் சொல்கிறார்கள். நாம்தான் அதை இன்னமும் உணராமல் இருக்கிறோம். இயற்கை சார்ந்த வாழ்வைநாம் வாழத் தொடங்கும்போது இயற்கையும் சிறக்கும். நம் வாழ்வும் சிறக்கும்” என்றார்.

இந்தச் சந்திப்பில் ‘லேக் வியூ’இயற்கை வேளாண்மை குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார், மாதவன், முத்துலெட்சுமி, சாந்தினி, ஜோதி, வெற்றிச்செல்வன், 3-ம் வகுப்பு படிக்கும் மாணவி தியானா உள்ளிட்ட பலரும் தங்களின் வீட்டுத்தோட்டத்தில் அமைத்த இயற்கை விவசாயத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக, இந்நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ பொது மேலாளர் டி.ராஜ்குமார் தொடங்கி வைக்க,முனைவர் இளங்கோ வாழ்த்துரை வழங்கினார். ‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம், ‘லேக் வியூ’ இயற்கை வேளாண்மை இணைந்து இந்நிகழ்வை நடத்தியது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x