கட்டிடம், மனை பிரிவு அனுமதியை உடனே வழங்க வேண்டும் துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவுறுத்தல்

கட்டிடம், மனை பிரிவு அனுமதியை உடனே வழங்க வேண்டும் துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவுறுத்தல்
Updated on
1 min read

கட்டிடம் மற்றும் மனைப்பிரிவுஅனுமதிக்காக விண்ணப்பித்தவர்களுடன் பேசி விடுபட்ட விவரங்களை பெற்று விரைவாக அனுமதிவழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கட்டிடம், மனைப்பிரிவுகளுக்கான அனுமதியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், நகர ஊரமைப்புத் துறைஅல்லது உள்ளாட்சி நிர்வாகங்களிடம் இருந்து பெற வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் அனுமதி வழங்கப்படாவிட்டால் அனுமதிக்கப்பட்டதாக கருதி பணிகளை தொடங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதி அளிப்பதில் அதிகார வரம்பானது தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டும் வருகிறது. இருப்பினும், அனுமதி அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவது குறித்து புகார்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகத்தில் நகர ஊரமைப்புத் துறையின் (டிடிசிபி) தலைமை அலுவலர்கள், மாவட்ட அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அதிகாரிகளிடம் அவர் கூறியதாவது:

கட்டிடம், மனைப்பிரிவு சம்பந்தமான விண்ணப்பங்கள் மீது காலதாமதமின்றி விரைந்து அனுமதிஅளிக்கும் வகையில் உரிய நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து விடுபட்ட விவரங்கள், கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் மட்டும் மின்னஞ்சல் மூலம் மனுதாரருக்கு தெரிவித்து தகவல்களை பெறலாம்.

தேவைப்பட்டால், மனுதாரருடன் நேரில் கலந்து பேச வாய்ப்பு அளித்து விடுபட்ட விவரங்களை விரைவாக பெற்று உரிய காலக்கெடுவுக்குள் தீர்க்கப்பட வேண்டும். மேலும், நகர ஊரமைப்புத் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 15 மாவட்ட அலுவலக பணிகளை தொய்வுகள் ஏதுமின்றி துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி,நகர ஊரமைப்புத் துறை இயக்குநர் பா.முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in