

தமிழகத்தில் கடந்த 2011 முதல்தற்போது வரை 14 லட்சத்து 40 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.652 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிலோஃபர் கபீல் தெரிவித்தார்.
கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் 32-வது கூட்டம் சென்னையில் உள்ள நலவாரிய கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.பிற மாவட்ட வாரிய உறுப்பினர்கள் காணொலி காட்சி மூலம் கூட்டத் தில் பங்கேற்றனர்.
தொழிலாளர் துறை அமைச்சர் நிலோஃபர் கபீல் தலைமையில்நடந்த இக்கூட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ரேஷன் சிறப்புதொகுப்பு ரூ.100 கோடியே 66 லட்சத்தில் வழங்கப்பட்டதற்கு வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், கட்டுமானத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும்வகையில் தலா ரூ.1,000 வீதம் 2 தவணைகளில் நிவாரண நிதியாக, தகுதியுடைய கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.246 கோடியே 43 லட்சம் நேரடியாக வழங்கப்பட்டது. இதுதவிர,கட்டுமானத் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய 1 லட்சம் சுயபாதுகாப்பு சாதனங்கள் வழங் கப்பட உள்ளன.
பின்னர் பேசிய அமைச்சர் நிலோஃபர் கபீல், ‘‘2011-ம் ஆண்டுமே 16-ம் தேதி முதல் இந்த ஆண்டுஜூலை 31-ம் தேதி வரை 10 லட்சத்து26 ஆயிரத்து 936 கட்டுமானத் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதுவரை 14 லட்சத்து 40ஆயிரம் பணியாளர்களுக்கு ரூ.652 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன’’ என்றார்.
இக்கூட்டத்தில் தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் அ.யாஸ்மின் பேகம் மற்றும் வாரிய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.