

ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் எஸ்.ரெங்கநாயகலு, பொதுச்செயலாளர் பி.பரமேஸ்வரன், இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், மாநில இணையதள அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
அவர்கள் ஊரக வேலை உறுதி திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
பின்னர் அவர்கள் கோட்டாட்சியரின் நேர்முன உதவியாளர் ரகுபதியிடம் வழங்கிய மனுவில், கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வரும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 55 வயது நிரம்பியவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு வருகிறது.
ஏராளமான கிராமங்களில் குடும்பத்தினரால் உதாசீனப்படுத்தி, ஆதரவற்ற நிலையில் தனிமையில் வாடும் அவர்கள் ஊரக வேலை உறுதி திட்டத்திலும் பணி மறுக்கப்படுவதால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே, அவர்களுக்கு வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வேண்டும். இல்லையென்றால் கரோனா கால நிவாரணமாக அவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்திருந்தனர்.