அனைத்துக் குடும்பங்களுக்கும் கரோனா ஊரடங்கு நிதி;  டிசம்பர் வரை ரேஷனில் இலவசப் பொருட்கள்: திருச்சியில் பல்வேறு அமைப்பினர் போராட்டம்

படம்:ஜெ.ஞானசேகர்.
படம்:ஜெ.ஞானசேகர்.
Updated on
2 min read

திருச்சி மாநகரில் இன்று அனைத்துக் குடும்பங்களுக்கும் கரோனா ஊரடங்கு நிதி, டிசம்பர் வரை ரேஷனில் இலவசப் பொருட்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

50 சதவீத இடஒதுக்கீடு கோரி..
"தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகியன இணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சுரேஷ், மாவட்டச் செயலாளர் பா.லெனின், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் துளசிதாஸ், மாவட்டச் செயலாளர் கே.மோகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மாதர் சங்கத்தினர்..
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஏ.மல்லிகா தலைமையில், "ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். டிசம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக பொருட்கள் வழங்க வேண்டும். ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தைக் கைவிட வேண்டும். பொதுவிநியோகத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். கரோனா காலம் முடியும் வரை நுண்நிதி நிறுவனங்கள் தவணை வசூலிப்பதை நிறுத்திவைக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம்..
"சுய உதவிக் குழு, நுண்கடன் நிறுனங்களின் கடன் வசூலை கரோனா ஊரடங்கு முடியும் வரை தள்ளிவைக்க வேண்டும். கடன் தவணை தள்ளிவைப்பு காலத்துக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் கரோனா ஊரடங்கு நிதியாக தலா ரூ.7,500 வீதம் வழங்க வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தபெதிக, திவிக, மக்கள் உரிமைக் கூட்டணி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், மகஇக, அமைப்புசாரா தொழிலாளர் இயக்கம், மக்கள் உரிமை மீட்பு இயக்கம், தமிழ்ப்புலிகள் கட்சி, சமூக நீதிப் பேரவை, ஜனநாயக சமூக கூட்டமைப்பு ஆகியவற்றை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் பணியாளர்கள்..
டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு கரோனா நோய்த் தொற்று அரசாணை 280-ஐ அமல்படுத்த வேண்டும். கரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும் வகையில் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கேரளத்தில் உள்ளதுபோல் நிர்வாக முறையை டாஸ்மாக்கில் அமல்படுத்த வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் தொமுச நிர்வாகி மலர்க்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏஐடியுசி மாநில துணைத் தலைவர் ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநகராட்சியில்..
திருச்சி மாநகரில் கூனிபஜார், பீமநகர் ஆகிய பகுதிகளில் சாக்கடைகளை தூர்வாரப்படாமல் குப்பையால் நிறைந்து கிடப்பதாகவும், ஏற்கெனவே சாக்கடையில் இருந்து அள்ளிய மண்ணை அப்புறப்படுத்தவில்லை என்றும் அந்தப் பகுதி மக்கள் மாநகராட்சியிடம் முறையிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், சாக்கடையை தூர்வாரவோ அல்லது சாக்கடை மண்ணை அப்புறப்படுத்தவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றுகூறி, அந்தப் பகுதி மக்கள் நேற்று சாலையில் குவித்துவைக்கப்பட்டிருந்த சாக்கடை மண்ணை எடுத்து வந்து மாநகராட்சி மைய அலுவலக வளாகத்துக்கு வெளியே சாலையில் கொட்டினர். தொடர்ந்து, சாக்கடை மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து, போராட்டம் முடிவு பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in