

ஏஎப்டி பஞ்சாலை மூட முழுக் காரணம் கிரண்பேடிதான் எனக்கூறி மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 1898-ல் பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் ஏஎப்டி மில் தொடங்கப்பட்டது. பழமையான இந்த மில் மிகவும் புகழ் பெற்றது. இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குத் துணிகள் ஏற்றுமதியாகின. ஒரு கட்டத்துக்குப் பிறகு நிர்வாகச் சீர்கேடுகள், முறைகேடுகள், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாததால் மில் நலிவடையத் தொடங்கியது.
கடந்த 2011-ல் தானே புயலில் ஏ, பி யூனிட்டுகள் சேதமடைந்தன. அதைத்தொடர்ந்து "லே-ஆப்" அடிப்படையில் பாதி ஊதியம் தரப்பட்டது. இதைத்தொடர்ந்து விருப்ப ஓய்வுத் திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதில் 80 சதவீதத்தினர் விண்ணப்பித்தனர்.
இச்சூழலில் கடந்த ஜனவரி மாதம் ஆலை மேலாண் இயக்குநர் வெளியிட்ட உத்தரவில் ஏப்ரல் 30-ம் தேதி முதல் ஏஎப்டி மில் நிரந்தரமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பலத்த சர்ச்சையை உருவானது. தங்களது அனுமதியின்றி ஆலையை மூடக் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளதாக அப்போது முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து மில்லை நடத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
இச்சூழலில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி ஆலையின் நிர்வாக இயக்குநர் பிரியதர்ஷினி, "ஏஎப்டி ஆலை ஏப்ரல் 30-ம் தேதியுடன் மூடப்பட்டுள்ளது" என்று மீண்டும் அறிவித்ததால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பஞ்சாலையை மூடக் கங்கணம் கட்டி நெருக்கடி கொடுத்தார். அதையடுத்து ராஜ்நிவாஸ் முன்பாக ஆறு நாட்கள் போராட்டம் நடத்தினோம். ஆறு நாட்களுக்குப் பிறகு போராட்டத்தின் முடிவில் ஆளுநர் கிரண்பேடி முன்பாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் முதல் கோரிக்கையே ஏஎப்டி பஞ்சாலையை நடத்துவதுதான்.
புதுச்சேரி ஏஎப்டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளை நடத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என ஆராய குழு அமைக்க முடிவானது. அக்குழுவுக்கு தலைமைச்செயலர் தலைமை வகிப்பார். இதர கோரிக்கைகள் பேசப்பட்டுக் கையெழுத்தானது.
தலைமைச்செயலர் தலைமையில் குழு அமைக்க ஆளுநருக்குக் கோப்பு அனுப்பப்பட்டது. அதை கிரண்பேடி ஏற்கவில்லை. மில்லை மூடச் சொன்னார். அதை நாங்கள் ஏற்கவில்லை. அமைச்சரவை முடிவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கோப்பை அனுப்பி மில்லை மூட சொன்னார்.
தற்போது எனக்கோ, துறை அமைச்சருக்கோ கோப்பை அனுப்பாமல் தன்னிச்சையாக ஆளுநர் உத்தரவால் ஏஎப்டி மில்லை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிரண்பேடி தன்னிச்சையாக மில்லை மூட உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து மத்திய அரசுக்கும், உள்துறைக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.
ஏஎப்டி மில்லை மூட முழுக்காரணம் கிரண்பேடிதான். மத்திய அரசு பார்த்துகொண்டு மாநில அரசுக்கு உதவாமல் பாராமுகமாய் இருக்கிறது. மத்திய அரசு முறையாகப் பதில் தரவேண்டும். சாதகமான பதில் வரவில்லை எனில் நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளோம். நிலையை உணர்ந்து மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.''
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.