தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறதா?- தமிழக அரசு பதிலளித்த நிலையில் மத்திய அரசும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறதா?- தமிழக அரசு பதிலளித்த நிலையில் மத்திய அரசும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறதா என கேள்வி எழுப்பி தமிழக அரசை பதிலளிக்க உத்தரவிட்ட வழக்கில் மத்திய அரசை எதிர் மனுதாரராக சேர்த்து இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருகிறது. குண்டர்கள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் துப்பாக்கி உரிமம் வைத்திருக்கிறார்கள். இது சரியல்ல, பிஹார், ஜார்கண்ட்டில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் வருகின்றன என நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இதுபற்றி டிஜிபியிடம் தெரிவிப்பதாகக் கூறினார்.

உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விட்டு விட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்தி கொள்ளையடித்ததாக பீஹாரைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், நாட்டு துப்பாக்கி பிஹாரில் இருந்து வந்திருக்கின்றன, தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மெதுவாக பரவி வருகிறது.

இது நாட்டுக்கும், மாநிலத்திக்கும் நல்லதல்ல. பீஹார், ஜார்கண்ட், சத்தீஸ்கரில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் தமிழகத்தில் ரவுடிகள், குண்டர்கள், அரசியல்வாதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பின்னர், தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, மற்றும் சென்னை காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள்,

*உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி கொள்ளையடித்ததாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

*வட மாநிலங்களில் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிள் எளிதாக கிடைக்கிறதா?

*சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்றதாக எத்தனை பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்?

*வெளிநாடுகளில் இருந்தும் ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகிறதா?

*தமிழகத்தில் எத்தனை பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது?

*உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டு்ளனர்?

*ரவுடி கும்பல் துப்பாக்கிகள் பெற்று கொலை, கொள்ளை, நில அபகரிப்பு குற்றத்தில் ஈடுபடுகின்றனரா?

*நக்ஸல்கள், சமூக விரோதிகளும், ஆயுதங்களை வைத்து சட்டம் –ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகின்றனரா?

என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில், மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தமிழக டிஜிபி-யின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மத்திய அரசையும் இந்த வழக்கில் தானாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பான கேள்விகளுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in