

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்பட நான்கு அமைச்சர்கள் நீரைத் திறந்து வைத்தனர். இதன் மூலம், சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற வாய்ப்புள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத் திட்டம் கடந்த 1955-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் மூலம் சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கிழக்குக் கரை கால்வாய்ப் பாசனம் மூலம் 27 ஆயிரம் ஏக்கரும், மேற்குக் கால்வாய் கரைப் பாசனம் மூலம் 18 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெற்று வருகின்றன.
அணையில் நீர் இருப்பைப் பொறுத்து ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை 9.60 டிஎம்சி கால்வாய் பாசனத்துக்கு திறந்து விடப்படுவது வழக்கம். நடப்பாண்டு மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால், குறிப்பிட்ட காலத்தில் கால்வாய்ப் பாசனத்துக்கு நீர் திறக்கப்படவில்லை. தென்மேற்குப் பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, இன்று கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடி நீரை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பண்ணன், சரோஜா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
இதுவரை கால்வாய்ப் பாசனத்துக்கு தலைமை மதகுகள் மனித சக்தி மூலம் இயக்கப்பட்டு நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த மதகுகள் ரூ.98 லட்சம் செலவில் மின் மயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மின்மயமாக்கப்பட்ட மின் விசை மூலம் இயக்கி கால்வாய்ப் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இன்று காலை 9.50 மணிக்கு அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர் மலர் தூவி பாசனக் கால்வாய் மதகுகளை திறந்து வைத்தனர்.
கால்வாய் பாசனத்துக்கு நீர் திறந்து வைத்த பிறகு அமைச்சர் செங்கோட்டையன் கூறியது:
''முதல்வர் பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து, மேட்டூர் அணையில் தொடர்ந்து 303 நாட்கள் 100 அடிக்கு குறையாமல் நீர் இருப்பு இருந்துள்ளது. விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக குடிமராமத்துப் பணி, கால்நடைப் பூங்காக்களை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்து, மக்களுக்கான பல நல்ல திட்டங்களை வகுத்து அளித்து வருகிறார். கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை 137 நாட்களுக்கு பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்படும். விவசாயிகளுக்குத் தேவையான உரம் தட்டுப்பாடின்றிக் கிடைக்க போதுமான இருப்பு உள்ளது. விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், பொதுமக்களின் நலன் காத்திடும் வகையில் அரசு செயலாற்றி வருகிறது.''
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு
தென் மேற்குப் பருவ மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக கடந்த 12-ம் தேதி அணை நீர் மட்டம் 97.27 அடியாக இருந்தது. நீர் மட்டம் விரைந்து 100 அடி எட்டும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 14-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு 10 ஆயிரம் கன அடியில் இருந்து நீர் திறப்பு 13,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை முதல் டெல்டா பாசனத்துக்கு நீர்த்திறப்பு 16,500 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
மேட்டூர் அணை நீர் மட்டம் 99.03 அடியாகவும், நீர் வரத்து 14,182 கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 63.59 டிஎம்சி-யாக உள்ளது. டெல்டா பாசனத்துக்கும், கால்வாய் பாசனத்துக்கும் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடி எட்டுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பருவ மழை தீவிரம் அடைந்து, காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதியில் மழை பெய்தால் மட்டுமே அணை நீர் மட்டம் தொடர்ந்து உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.