

பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கு எதிராக மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள், திண்டுக்கல் ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் பதாதைகளை ஏந்தி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் 64 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் செல்வநாயகம், ஜீவநந்தினி ஆகியோர், மக்களின் அடிப்படை தேவை பணிகளுக்கான 14 வது நிதிக்குழு நிதியை ஒதுக்கீடு செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நிதியை ஒன்றிய நிர்வாகம் கையாள்வதற்கு பதிலாக மாவட்ட நிர்வாகம் ஊராட்சி ஒன்றிய பணிகளில் நேரடியாக தலையிட்டு ஒன்றிய நிர்வாகத்தின் அதிகாரத்தை பறிக்கின்றனர்.
இது பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கு எதிரானது என கூறி கூட்டத்தில் பதாதைகளை ஏந்தி மாவட்ட நிர்வாகத்தை குற்றம்சாட்டி கூட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தங்களது கோரிக்கைகளை மனுவாக ஒன்றிய தலைவர் ராஜாவிடம் வழங்கினர்.