Last Updated : 17 Aug, 2020 05:03 PM

 

Published : 17 Aug 2020 05:03 PM
Last Updated : 17 Aug 2020 05:03 PM

சிவகளையில் முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணி தொடக்கம்: மனித எலும்புகளை மரபணு சோதனை செய்ய ஏற்பாடு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளைத் திறந்து, அதில் உள்ள பொருட்களை ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கியது.

முதுமக்கள் தாழிகளில் உள்ள மனித எலும்புகளை மரபணு சோதனை செய்வதற்காக மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் சிவகளை வந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட சிவகளையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த மே 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொல்லியல் துறை கள இயக்குநர் எம்.பிரபாகரன் தலைமையில் 10 தொல்லியல் அதிகாரிகள், ஆய்வு மாணவர்கள் மற்றும் சிவகளை பகுதியை சேர்ந்த 80 தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகளை பரம்பு பகுதியில் 50 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தற்போது வரை 31 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த முதுமக்கள் தாழிகளை திறந்து அவைகளுக்கு உள்ளே இருக்கும் பொருட்களை ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கியது. தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் எம்.சிவானந்தம் இந்த பணிகளை தொடங்கி வைத்தார்.

குறிப்பாக முதுமக்கள் தாழிகளுக்குள் இருக்கும் மனித எலும்புகளை சேகரித்து மரபணு பரிசோதனை (டிஎன்ஏ பகுப்பாய்வு) செய்யப்படுகிறது. இதற்காக மதுரை காமராஜ் பல்கலைக்கழக பேராசிரியர் பிச்சையப்பன் தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர். முதல் கட்டமாக 2 முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது

இது குறித்து தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் கூறியதாவது: ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு மூலம் சுமார் 3 ஆயிரம் ஆண்டு பழமையான நாகரிகம் தெரிய வந்தது. அதற்கு இணையான காலகட்டத்தில் சிவகளையிலும் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் சிவகளை அகழாய்வில் தெரிய வந்துள்ளது.

அகழாய்வு பணியில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் உள்ள எழும்புகளை சேகரித்து மரபணு பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைகழக பேராசிரியர் பிச்சையப்பன் தலைமையிலான குழுவினர் இந்த பரிசோதனையை செய்வார்கள். முதல் கட்டமாக 2 முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டு ஆய்வு நடைபெறுகிறது.

ஒரு முதுமக்கள் தாழியில் முழுமையாக ஆய்வு செய்ய 2 நாட்கள் வரை ஆகும். 31 முதுமக்கள் தாழிகளிலும் முழுமையாக ஆய்வு செய்ய 2 முதல் 3 மாதங்கள் வரை ஆகும்.

மனித எலும்புகளை மரபணு சோதனை செய்யும் பணி மதுரை காமராஜ் பல்கலைக்கழத்தில் மேற்கொள்ளப்படும். மேலும், முதுமக்கள் தாழிகளுக்குள் மண் பொருட்கள், இரும்பு பொருட்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் இருக்க வாய்ப்பு உள்ளன. இந்த பொருட்கள் சேகரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு ஆய்வுக்கு அனுப்பப்படும் என்றார் அவர்.

மதுரை காமராஜர் பல்கலைகழக பேராசிரியர் பிச்சையப்பன் கூறும்போது, முதுமக்கள் தாழிகளுக்குள் இருக்கும் மனித எலும்புகள் சேகரிக்கப்பட்டு பல்கலைக்கழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு டிஎன்ஏ பகுப்பாய்வு செய்யப்படும். இறந்த மனிதர்களின் காது, பல் தாடை பகுதியை ஆய்வு செய்யும் போது அம்மனிதன் வாழ்ந்த காலகட்டம் தெரியவரும். இந்த ஆய்வு முடிவு வருவதற்கு 1 முதல் 2 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றார் அவர்.

இந்த ஆய்வின் போது திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் சுதாகர் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள், தொல்லியல் ஆர்வலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x