

சிங்கப்பூர் விமானத்தின் கழிப் பறையில் இருந்து 6 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பயணிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
திருச்சிக்கு அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து திருச்சி வழியாக சென்னை வரும் விமானம் திருச்சி விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் 1.30-க்கு வந்தது. அப்போது, அதில் வந்த பயணிகள் யாரையும் இறக்கிவிடாமல், அதிகாரிகள் விமானம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த விமானத்தின் கழிப்பறையில் 6 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை கைப்பற்றப்பட்டன.
அந்த விமானத்தில் கடைசியாக கழிப்பறையை பயன்படுத்திய 6 பயணிகள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல், சென்னை விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.