

புதுச்சேரியில் புதிதாக 302 பேர் கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் நால்வர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் 2 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரைவிடப் படுக்கை வசதி இல்லாததால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் அதிகரித்துள்ளனர்.
புதுச்சேரியில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இங்கு இதுவரை 8029 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 302 பேர் கரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,596 பேர் சிகிச்சையில் உள்ளனர். படுக்கை வசதி இல்லாதது உட்பட பல காரணங்களால் வீட்டில் 1,692 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை விட வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் அதிகரித்துள்ளனர். இதுவரை 4,627 பேர் குணமடைந்துள்ளனர். இதன் சதவீதம் 57.6 ஆகும்.
புதுச்சேரியில் கரோனா சிகிச்சையில் இருந்த நால்வர் உயிரிழந்ததால் இறந்தோர் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.42 சதவீதமாக உள்ளது.
உயரும் பாதிப்பு
புதுச்சேரியில் கரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆறு நாட்களில் மட்டும் 2,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இடமின்றி வீட்டில் தனிமைப்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது தொடர்ந்தால் வீட்டில் உள்ள மற்றவர்களும் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கும். இச்சூழலில் தனியார் மருத்துவமனைகள் கட்டணம் நிர்ணயிக்கவும் அரசு அனுமதி்த்துள்ளது. மருத்துவர்கள் தொடங்கி செவிலியர், சுகாதாரத்துறையினர் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில், "பிற மாநிலங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.65 ஆயிரம் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், புதுவையில் ரூ.40 ஆயிரம்தான் கொடுக்கப்படுகிறது. அதேபோல் சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கு பிற மாநிலங்களில் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படுகிது. புதுவையில் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரைதான் வழங்கப்படுகிறது.
இதனால் நியமிக்கப்பட்ட ஒப்பந்த மருத்துவர்கள் வேலையை விட்டுச் செல்கின்றனர். குறைந்தபட்சம் ஒப்பந்த மருத்துவர்களுக்கு உடனே ரூ.55 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டிய தேவை உள்ளது. தினமும் 350 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதே நிலை நீடித்தால் இம்மாத இறுதிக்குள் மேலும் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகளைத் தயார் செய்யுமாறு முதல்வர் அறிவுறுத்தினார். அதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகள் போடுவதற்காகத் தயாராக உள்ளோம். அதற்கேற்பக் கழிவறை, குளியலறை வசதி தேவை உள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குக் கவச உடையும், ஒரு நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு உணவுக்காக ரூ.250 கொடுப்பதாகக் கூறியுள்ளோம். மேலும், அரசிடமிருந்து அனுப்பப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்கான கட்டணத்தைக் கொடுக்க மாட்டோம். இதுபோன்ற நேரத்தில் புதுவை மக்களுக்கு இலவசமாகச் சிகிச்சை அளிப்பது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கடமையாகும். ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்படும் மற்ற நபர்களுக்கு கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம்" என்றார்.