

மணல் எடுப்பது தொடர்பாக நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தும், தினமும் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்நிலை தொடர்ந்தால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், சவுடு மண் எடுப்பதற்கு பெறும் அனுமதி முறையாக பின்பற்றப்படுவது அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படுகிறதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மணலூரைச் சேர்ந்த பொற்கோ, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்," மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் சிவகங்கை மாவட்டம் வைகை நதிக்கரைப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர், மற்றும் பாசியாபுரம்.
இந்தப் பகுதியில் தற்போது தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் கீழடி பகுதி உட்பட பல இடங்களில் சங்ககாலம் முதல், வைகை நதிக் கரையோரம் வாழ்ந்த மனிதர்கள் நாகரிகமாக வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.
இங்கு கிடைத்துவரும் தமிழ் பிராம்மி எழுத்துகள், பண்டைய பொருட்கள் போன்றவை 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்து வருகிறது.
இந்தப் பகுதியில் உள்ள அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவர், மணலூர் பகுதியில், உள்ள விவசாயப் பகுதியில் சவுடு மண் எடுப்பதாகக் கூறி அரசின் அனுமதி பெறாமல் அரசு விதிகளை மீறி விவசாய நிலங்களில் ஆழமாக தோண்டி அளவுக்கதிகமாக மணலை அள்ளி வருகிறார்.
இதனால் விவசாய நிலங்கள் பாதிப்பு அடைவதுடன், தொல்லியல் ஆய்வுகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இப்பகுதியில் மணல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, "கீழடி அகழாய்வின் தொடர்ச்சியாக மணலூர் அகழாய்வுப் பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் மணல் எடுக்கப்படுகிறது? மேலும் சவுடு மண் எடுப்பதற்கு பெறும் அனுமதி முறையாக பின்பற்றப்படுகிறதா என அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படுகிறதா? எனக் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, தினமும் 10 க்கும் மேற்பட்ட மணல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வருகிறது. மணல் வழக்குகள் சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என தெரிவித்தனர்.
தொடர்ந்து, வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தவிட்டு வழக்கை செப்டம்பர் 7 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.