சென்னையில் டாஸ்மாக்  மதுக்கடைகள் திறப்பு: ஸ்டாலின் எதிர்ப்பு 

சென்னையில் டாஸ்மாக்  மதுக்கடைகள் திறப்பு: ஸ்டாலின் எதிர்ப்பு 
Updated on
1 min read

சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் அரசு உத்தரவுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.மனிதாபிமானமற்ற செயல் என விமர்சித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் காரணமாக மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்தது, இந்நிலையில் சென்னையிலும் மதுக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர மதுபான சில்லறை விற்பனை கடைகள் கடந்த மே 7 ஆம் தேதி முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் வரும் 18-ம் தேதி முதல் இயங்கும். மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது.

மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். என அறிவிப்பு வெளியானது.

இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலினும் சென்னையில் மதுக்கடைகளை திறப்பதை கடுமையாக எதிர்த்துள்ளார்.

இதுகுறித்து அவரது முகநூல் பதிவு:

“சென்னைக்கு வெளியே பிற மாவட்டங்களில் கரோனா பரவலை ஏற்படுத்தி அதிகப்படுத்தியதில் பெரும்பங்கு டாஸ்மாக் கடைகளுக்கு உண்டு என்று நன்றாகத் தெரிந்தபிறகும், சென்னையில் கடைகளைத் திறப்பது கரோனா பரவலுக்கான பெருவழி, அதுவும் ஊரடங்கு காலத்தில் திறப்பது, தவறுக்கு மேல் தவறு செய்வதாகும்!

யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன, வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல். கரோனாவின் தீவிரம் குறையாத ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக் வேண்டாம்; கடைகளைத் திறந்து வைரஸ் உற்பத்தியை மேலும் பெருக்கிட வேண்டாம்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in