

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கால் வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வாழை விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். கேரளாவுக்கு கொண்டு சென்றுவிற்பனை செய்ய அரசு அனுமதித்த பின்னரும் உரிய வருவாய் கிடைக்கவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியாகவும், தென்னை, ரப்பர் பயிர்களுடன் ஊடு பயிராகவும் 35 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் வாழை பயிரிடப்பட்டுள்ளது. குறிப்பாக நேந்திரன் வாழை அதிக அளவில் சாகுபடியாகிறது.
கரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக, அறுவடையான வாழைத்தார்களை வெளியூர் கொண்டு செல்ல முடியாமல், ஒரு கிலோ நேந்திரன் வாழைக்காய் 8 ரூபாய்க்கு விற்கும் அவலம் நீடிக்கிறது. சாகுபடி செலவு கூட கிடைக்காமல் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டது. கோயில் விழாக்கள், திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாததால், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் வாழைக்குலைகள் மரத்திலேயே பழுத்து அழுகி வீணாகின.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வாழைத்தார்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல குமரி மாவட்ட நிர்வாகமும், கேரளஅரசும் அனுமதி வழங்கின. இதனால், வாழைத்தார்களை திருவனந்தபுரம் உட்பட கேரளாவில் உள்ள சந்தைகளுக்கு குமரி மாவட்ட விவசாயிகள் அனுப்பி வைத்தனர். எனினும், கிலோ 30 ரூபாய்க்கு குறைவாகவே விற்பனையாகிறது. இதனால், வாழை விவசாயத்தை கைவிடும் மனநிலையில் விவசாயிகள் உள்ளனர்.
கல்படி ஏலாவில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ள கருங்கல் விவசாயி ஜேசுராஜ் கூறும்போது, ``20 ஆண்டுகளுக்கு மேல் நேந்திரன் வாழை விவசாயம் செய்து வருகிறேன். எனது அனுபவத்தில் இதுபோன்ற ஒரு நஷ்டத்தை இதுவரை சந்தித்ததில்லை. ஒக்கி புயலின்போது கூட இதே கல்படி ஏலாவில் பல ஆயிரம் வாழைகள் விழுந்து சேதமடைந்தன. அப்போது வாழைக்குலைகளுக்கு விலை இருந்ததால் அதிலிருந்து விவசாயிகள் மீண்டனர். ஆனால், கரோனா ஊரடங்கு தொடங்கிய நேரத்தில் மாவட்டம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழைக்குலைகள் அறுவடை பருவத்தில் இருந்தன. சந்தைகளை மூடியதால் விற்பனைசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, குறைவான அளவே வாழைக்குலைகள் உள்ளன. ஆனாலும், மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்ததால் நேந்திரன் வாழை கிலோ ரூ.30-க்கு மேல்செல்லவில்லை. தொடர் இழப்புகளால் அடுத்தபோக வாழை சாகுபடியை கைவிட்டுள்ளோம்.என்றார்.
ஓணம் சீஸனிலும் விலைக்கு வாய்ப்பில்லை!
நேந்திரன் மற்றும் உயர்ரக வாழைக்குலைகளை கேரளத்தை நம்பியே குமரி மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்தனர். கடந்த ஆண்டு கேரளாவில் வெள்ளச்சேதத்தால் பெயரளவுக்கே ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் வாழைக்குலைகள் எதிர்பார்த்த விற்பனை இல்லை. இந்த ஆண்டும் கரோனாவால் ஓணம் சீஸனில் கேரள விற்பனை கைகொடுக்க வாய்ப்பிருக்காது. எனவே, விவசாயிகள் சோர்ந்து போயுள்ளனர்.