

எமரால்டில் கட்டப்பட்ட தற்காலிக வீடுகளின் கட்டுமானப் பணிகள் தரமில்லாததால், சமீபத்தில் பெய்த கன மழை, பலத்த காற்றுக்கு மேற்கூரைகள் சேதமடைந்தன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கன மழையால் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கடும் சேதம் ஏற்பட்டது. 1380 வீடுகள் சேதமடைந்தன. இதையடுத்து, ஆய்வு மேற்கொள்ள வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பகுதியாக வீடு சேதமடைந்தவர்களுக்கு 15 நாட்களில் தற்காலிக குடியிருப்புகளும், முழுமையாகசேதமடைந்தவர்களுக்கு 6 மாதங்களில் வீடு கட்டி தரப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்காக ஓவேலி, நடுவட்டம், எமரால்டு ஆகிய பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு, தற்காலிக வீடுகள் கட்டப்பட்டன. எமரால்டு பகுதியில் ரூ.2.20 கோடி மதிப்பில் 120 வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், வீடுகள் கட்டப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் பெய்த கன மழையால், எமரால்டில் கட்டப்பட்ட வீடுகளின் கூரை காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அனைத்து வீடுகளுக்கும் தகரத்தினாலான கூரை அமைக்கப்பட்ட நிலையில், காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்தன.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, ‘கடந்த ஆண்டு எமரால்டில் பெய்த மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு மாற்றாகவீடுகள் கட்டப்பட்டன. ஆனால் ஓராண்டாகியும் வீடுகள் மக்களுக்குஒதுக்கப்படவில்லை.
கட்டுமானப் பணிகள் தரமானதாக இல்லை. திட்டமிடாமல் வீடுகள் கட்டப்பட்டன. வீடுகளின் கூரை சேதமடைந்துள்ளன. மக்களின் வரி பணம் விரயமாகி உள்ளது. இதுதொடர்பாக ஒப்பந்ததாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றனர்.
ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ‘எமரால்டில்காற்றின் வேகத்தால் வீடுகளின்கூரைகள் சேதமடைந்துள்ளன. இதனால், வீடுகளுக்கு கான்கிரீட்டால் கூரை அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. ரூ.1.10 கோடி மதிப்பில் கான்கிரீட் கூரை அமைக்கப்படும்’ என்றார்.