

சூளகிரி அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் 2 பேர் உயிரிழந்தனர். யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விடக்கோரி சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள புலியரசி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிமுனிராஜ் (28). ஜோகீர்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (40). இவர்கள் 2 பேரும், நேற்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள வனப்பகுதியையொட்டி உள்ள நிலத்துக்குச் சென்றனர். அங்கு வந்த ஒற்றை யானை, 2 பேரையும் தூக்கி வீசி காலால் மிதித்தது.இதில் முனிராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ராஜேந்திரன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனைத் தொடர்ந்து முனிராஜ் சடலத்துடன் சூளகிரி - பேரிகைசாலையில் உறவினர்கள், பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, அடர்ந்து வனப்பகுதிக்கு கொண்டு என வலியுறுத்தினர். பின்னர் போலீஸாரின் சமாதானத்தை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர்.
முனிராஜ், ராஜேந்திரன் குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் முதல் கட்ட நிவாரண நிதியாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த நிதியைகுடும்பத்தினரிடம் வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன் வழங்கினார்.