

தமிழகத்தில் கடந்த 6 வாரங்களாக நோய் தொற்று இருப்போர் சராசரியாக 55 ஆயிரத்துக்கு கீழ் உள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், பரிசோதனையின்போது, 100 பேருக்கு8.5 சதவீத நபர்களுக்கே கரோனா பாதிப்பு கண்டறியப்படுவதாக கூறினார்.
மதுரை காளவாசல், முடக்குச்சாலை ஆகிய பகுதிகளில் நடந்த தீவிர காய்ச்சல் கண்டறியும் முகாமை அவர் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் நுண்ணியிரியல் ஆய்வகத்தைப் பார்வையிட்டு மருத்துவர்கள், அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 6 வாரங்களாக நோய் தொற்று இருப்போர் சராசரியாக 55 ஆயிரத்துக்குகீழ் உள்ளனர். மக்கள் தகுந்த கண்காணிப்பில் இருக்க வேண்டும். குறிப்பாக மதுரை, திருமங்கலம், நாமகலைப் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.
10 மடங்கு சோதனை
மதுரையைப் பொருத்தவரை 1,057 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6 வாரங்களுக்கு முன் மதுரையில் பாதிப்பு அதிகரித்திருந்தது. தற்போது சராசரி நூறுக்குள் குறைந்துள்ளது. குறைந்தது 10 மடங்குபரிசோதனை செய்ய வேண்டும்என்ற முதல்வரின் உத்தரவால்பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மதுரையில் தினமும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது. வீடு, வீடாகக் காய்ச்சல் கணக்கெடுப்பு நடக்கிறது. அரசு மருத்துவமனைக்கு யார் வந்தாலும் கரோனா பரிசோதனை செய்கிறோம். இதனால் இறப்பின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது. நேரடியாக கரோனா இறப்பு என்பது பத்துக்கும் குறைவு. இதர நோய்களுடன் கரோனா சேர்ந்துள்ளது.
தற்கொலை, விபத்து உள்ளிட்ட மற்ற இறப்புகளிலும் கரோனா பரிசோதிக்கப்படுகிறது. இதிலும் கரோனா தொற்று இருந்தால் உலகசுகாதார நிறுவனக் கணக்கீடுகளின்படி கரோனா இறப்புகளோடு சேர்க்கப்படுகிறது
இறப்பு விகிதத்தைக் குறைக்க,நோய் எதிர்ப்பு சக்தி, ஆயுர்வேதமாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் தினமும் 70 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்தாலும் 100 பேருக்கு 8.5 சதவீத நபர்களுக்கே பாதிப்பு கண்டறியப்படுகிறது. 10 சதவீத பாதிப்புக்கு அதிகமான கடலூர், தென்காசி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
கரோனாவில் சேர்க்கப்படும் இறப்பு
முன்பு இதய பாதிப்பால் ஒருவர் இறந்தால், அது இதய பாதிப்பு எனக் கணக்கிடப்பட்டது. தற்போது இதய பாதிப்புள்ள ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இறந்தால் கரோனா இறப்பில் சேர்க்கப்படுகிறது. கரோனா தொற்றால் மட்டுமே இறப்போர் எண்ணிக்கை தினமும் 9 பேர் வரை மட்டுமே உள்ளது.
18 முதல் 40 வயதினர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும். ஐசிபிஎம்ஆர் ஒப்புதலுடன் சித்த ஆயுர்வேதா மருந்துகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. கரோனா மட்டுமின்றி பிற நோய் பாதிப்பு சிகிச்சைக்கும் முக்கியத்துவம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி. வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.