

தேசிய கொடியை அவமதித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் காவல்ஆணையரிடம் புகார் தரப்பட்டது.
நாடு முழுவதும் 74-வது சுதந்திர தினவிழா நேற்று முன்தினம்கொண்டாடப்பட்டது. எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் தேசிய கொடியை ஏற்றினார். இந்நிலையில், தேசிய கொடியை அவமதித்ததாக மு.க.ஸ்டாலின் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதிமுக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான ஆர்.எம்.பாபு முருகவேல் சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் நேற்று அளித்தபுகார் மனுவில், ‘தேசிய கொடியைஏற்றும்போது, இறக்கும்போது அதற்கு உரிய மரியாதை செலுத்தவேண்டும். ஆனால், மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றும்போது மரியாதை செலுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை. கையுறை அணிந்திருந்தார்.
தேசிய கொடியை ஏற்றிய பிறகு அதற்கு மரியாதை செலுத்தாமலும், வணக்கம் செலுத்தாமலும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். எனவே, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படியும், தேசியக்கொடி அவமதிப்பு சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.