

அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.16 கோடி மதிப்பில் தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இப்பணிகளை ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆய்வு மேற்கொண்டு பருவமழைக்கு முன்பாக பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.
சென்னை நதிகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், அடையாறு ஆற்றை மறு சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சிகள், நகராட்சி, மாநகராட்சி ஆகியவை அந்தந்த உள்ளாட்சிப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கையைத் தொடங்கிஉள்ளன.
ஆதனூர் முதல் மண்ணிவாக்கம் வரை உள்ள அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்க, செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சுமார் 10 கி.மீ நீளத்துக்கு இருபுறமும் நிரந்தர தடுப்பு வேலிகள் அமைக்க ரூ.16 கோடி மதிப்பிலான பணிகள் 6 பிரிவாக ஒப்பந்தத்துக்கு விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 70 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளன.
இப்பணிகளை ஆட்சியர் ஜான் லூயிஸ் நேற்று ஆய்வு செய்தார். பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தவர், வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்துப்பணிகளையும் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது காட்டாங்கொளத்தூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் விக்டர் அமிர்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி, உதவிப் பொறியாளர்கள் மகாலிங்கம், மாரி செல்வம், பிரேமசுதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.