

தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.15 கோடியே 86 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு ரூ.4 கோடியே 53 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், பயிற்சியாளர்கள் விடுதி கட்டிடம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு ரூ.7 கோடியே 3 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், பயிற்சியாளர்கள் விடுதி கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
தாராபுரம், திருப்பூர், முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.2 கோடியே 43 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பணிமனை, வகுப்பறை கட்டிடங்களையும், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டும் மையத்துக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும் முதல்வர் திறந்துவைத்தார்.
மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு பிரிவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் (Tamilnadu Private Job Portal) மூலமாக தனியார் துறை நிறுவனங்களால் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 238 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.