Published : 20 Sep 2015 09:24 AM
Last Updated : 20 Sep 2015 09:24 AM

மதிமுகவில் இருந்து நிர்வாகிகள் விலகினாலும் தொண்டர்கள் எழுச்சியால் கட்சிக்கு புது உத்வேகம்: வைகோ நம்பிக்கை

மதிமுகவில் இருந்து நிர்வாகிகள் சிலர் விலகினாலும் தொண்டர்கள் எழுச்சி பெற்றுள்ளதால் கட்சிக்கு புது உத்வேகம் கிடைத்துள்ளது என்று வைகோ கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் பாலவாக்கம் சோமு, அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து சேலம் மாவட்டச் செயலாளர் தாமரைக்கண்ணன், மாநில மகளிரணிச் செயலாளர் குமரி விஜயகுமார் ஆகியோரும் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தனர். மதிமுக பொருளாளர் மாசிலாமணி, மதுரை மாவட்டச் செயலாளர் ஆகியோரும் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில் மதிமுக உயர் நிலைக்குழுக் கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது:

மதிமுக உயர்நிலைக்குழுக் கூட்டம் கடந்த 7-ம் தேதி நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவைத்தான் திருப்பூர் மாநாட்டில் அறிவித்தேன். விடுதலைச் சிறுத்தைகளுடன் கூட்டணி கூடாது என்று பாலவாக்கம் சோமு சொன்னார். மாசிலாமணி உள்ளிட்டவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. திமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதாக நான் சொல்லவில்லை. தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கலாம் என்றுதான் சொன்னேன்.

எந்தப் புயலும் எங்கள் கூட்டணியை உடைக்க முடியாது என்று கருணாநிதி கூறினார். மதிமுகவை உடைப்பது என்றால் எப்போதோ உடைத்திருப்போம் என்று ஸ்டாலின் கூறுகிறார். கடந்த 1996 முதலே மதிமுகவை உடைக்க திமுக முயற்சித்து வருகிறது. தொண்டர்களால் உருவான இந்த இயக்கத்தை யாரும் எதுவும் செய்ய முடியாது.

திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். இப்போதே எங்கள் கட்சி ஆட்களை திமுக இழுக்கிறது. கூட்டணி வைத்து 10 எம்எல்ஏக்கள் கிடைத்தால், அதில் 7 எம்எல்ஏ-க்களை அவர்கள் இழுத்துவிடுவார்கள். அப்படியிருக்கையில் நாங்கள் எப்படி திமுகவுடன் கூட்டணி வைக்க முடியும்.

மக்கள் அனுதாபம்

எங்கள் கட்சியின் உறுப் பினர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. நிர்வாகிகள் சிலர் விலகினாலும் தொண்டர்கள் எழுச்சி பெற்றுள்ளதால் கட்சிக்கு புது உத்வேகம் கிடைத்துள்ளது. ஆயிரம் பொதுக்கூட்டம் போட்டு கிடைக்க வேண்டிய நன்மையை திமுக அளித்துள்ளது. மக்களுக்கு எங்கள் மீது அனுதாபம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நலன் காக்கும் கூட்டியக்க கூட்டணி சரியான முடிவாகும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x