Last Updated : 16 Aug, 2020 03:02 PM

 

Published : 16 Aug 2020 03:02 PM
Last Updated : 16 Aug 2020 03:02 PM

தமிழருவி மணியனையும், சாலமன் பாப்பையாவையும் இந்தி படிக்க விடாமல் செய்தது திமுகவா? - முன்னாள் துணைவேந்தர் அ.இராமசாமி பேட்டி

முன்னாள் துணைவேந்தர் அ.இராமசாமி

தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்களில் ஒருவர் அ.இராமசாமி. 26 ஆண்டுகள் பேராசிரியர் பணி, அதைத் தொடர்ந்து பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், துணைவேந்தர், மாநில உயர் கல்வி மன்ற துணைத்தலைவர் என்று பல பொறுப்புகளை வகித்தவர். திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் கல்விக்கொள்கை குறித்த பொறுப்புகளை வகித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக, 1965-ல் மதுரைக் கல்லூரி மாணவர் தலைவராக இருந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து அவரது கருத்து என்ன? பேசலாம்.

புதிய கல்விக் கொள்கையில் நீங்கள் ஏற்கிற விஷயங்கள் எவை? எதிர்க்கிற விஷயங்கள் எவை?

இது கல்வி வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட கொள்கையாக அல்லாமல், அவர்களது சித்தாந்தத்தைத் திணிப்பதற்கான செயல் திட்டமாகவே இருக்கிறது. ஒரு சாதி ஆதிக்கத்திற்கும், மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்கான சதித்திட்டமாகவே தெரிகிறது. குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்றவர்கள் யாரும் படிக்கக் கூடாது, பட்டம் பதவிக்கு வரவே கூடாது என்பது மாதிரியான மறைமுக செயல்திட்டத்துடன் (Hidden Agenda) இந்தக் கொள்கையைக் கொண்டுவந்திருப்பதாக உணர்கிறோம்.

எனவே, இந்த அறிக்கையை ஒட்டு மொத்தமாக எதிர்க்கிறோம். 2019-ல் கஸ்தூரி ரங்கன் கமிட்டி வெளியிட்ட வரைவு அறிக்கைக்கும், இப்போது மத்திய அமைச்சரவை அங்கீகரித்து வெளியிட்டுள்ள கல்விக் கொள்கைக்குமே நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. இதெல்லாம் கல்விக் கொள்கையில் அவர்களுக்கே தெளிவு இல்லை என்பதையும், அவர்கள் குழப்பத்தில் இருப்பதையும் காட்டுகிறது.

நீங்கள் எதிர்க்கிற அம்சங்கள் எவை என்று குறிப்பிட்டுச் சொல்லலாமா?

நுழைவுத்தேர்வை எதிர்க்கிறோம். மருத்துவக் கல்லூரிகளுக்கே நுழைவுத் தேர்வு கூடாது என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறபோது, இவர்கள் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி. போன்ற கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்கிறார்கள். பெருநகரங்களில் வசிப்பவர்களும், வசதி படைத்தவர்களும் மட்டுமே நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி பெற முடியும்.

அடுத்து கிராமப்புறங்களில் உள்ள ஓராசிரியர் பள்ளிகளை இணைக்கும் முடிவை எதிர்க்கிறோம். அதாவது, சிறு கிராமங்களில் உள்ள ஓராசிரியர் பள்ளிகளை மூடப்போகிறார்கள். 10 ஊர்ப்பள்ளிகளை சேர்த்து, ஒரு பெரிய ஊரில் ஒரே பள்ளியாக நடத்தப்போகிறார்கள். அப்படிச் செய்தால் சின்னக்குழந்தைகள் அவ்வளவு தூரம் போய் படிக்க முடியுமா?

காமராஜர் பள்ளிக்கூடம் இல்லாத ஒவ்வொரு கிராமத்தையும் தேடித்தேடி பள்ளிக்கூடம் திறந்தார். அதனால்தான் அவரைக் 'கல்விக்கண் திறந்தவர்' என்று சொல்கிறோம். இவர்கள் கல்வியைப் பரவலாக்குவதற்குப் பதிலாக, ஒரே இடத்தில் குவிக்கப் பார்க்கிறார்கள்.

கல்லூரியிலும் 5,000 மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள். அந்த விதிமுறை நடைமுறைக்கு வந்தால் மதுரை போன்ற ஊர்களிலேயே பல கல்லூரிகளை மூட வேண்டியது வரும். அப்படியானால், மேலூர், உசிலம்பட்டி மாதிரியான ஊர்களில் உள்ள கல்லூரிகளின் நிலை என்னாகும்?

நான் படித்த காலத்தில், எம்.ஏ. படிக்க வேண்டும் என்றால் சென்னைக்குத்தான் போக வேண்டும். இப்போது உயர்கல்வியும் பரவலாக்கப்பட்டிருக்கிறது. அதை எட்டாக்கனியாக்கும் இந்த கல்விக் கொள்கை.

இன்னொரு புறம் 5,000 மாணவர்கள் ஒரே கல்லூரியில் படித்தால், கல்லூரியை நிர்வகிப்பது எப்படி? அதிகரிக்கும் வெளியூர் மாணவர்களுக்கு விடுதி வசதி செய்வது எப்படி? அதைவிட மோசம், ஒவ்வொரு பல்கலைக்கழக வளாகத்திலும் 25 ஆயிரம் மாணவர்கள் இருக்க வேண்டுமாம். நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் இருக்குமாம். அப்படியானால் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் இருக்கிற கல்விக்குழுவின் (போர்டு ஆஃப் ஸ்டடி) வேலை என்ன? ஆக, இதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமே இல்லாத பரிந்துரைகள்.

அடுத்த கொடுமை 3, 5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது. அதுவும் தனியார் நடத்துவார்களாம். கூடவே தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியையும் புகுத்துகிறார்கள். இதெல்லாம் இடைநிற்றலையே ஊக்குவிக்கும்.

அதேபோல சமஸ்கிருதத்துக்கு அதீத முக்கியத்தும் கொடுக்கிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் தராமல், சமஸ்கிருதம் படிப்பதற்கு மட்டும் மிக அதிகமாக நிதி ஒதுக்குகிறார்கள். மொத்தமே 25 ஆயிரம் பேர் மட்டுமே பேசுகிற மொழிக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்? சமஸ்கிருதத்தில் பி.எட். நடத்தப்போவதாகச் சொல்வது ஏன் என்று கேட்கிறோம்.

உள்ளூரில் ஒருவர் கல்லூரி, பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு 1,008 விதிமுறைகளை வைத்திருக்கும் அரசு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை கண்ணை மூடிக்கொண்டு அனுமதிப்பதையும் எதிர்க்கிறோம். லாட்ஜில் ஒரே ஒரு அறையை வாடகைக்குப் பிடித்துக்கொண்டு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என்று சொல்லி, ஏற்கெனவே மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டைப் பற்றியும், பெண் கல்வியைப் பற்றியும் இந்தக் கொள்கையில் ஒன்றுமே சொல்லப்படவில்லை. இந்தக் குளறுபடிக்கெல்லாம், கல்வியாளர்களே இல்லாமல் உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கை தான் காரணம்.

கஸ்தூரி ரங்கன் நல்ல விஞ்ஞானி. ஆனால், கல்வியாளர் இல்லையே? நான் பேராசிரியராக, பதிவாளராக, துணைவேந்தராக இருந்தவன் என்பதால், பல்கலைக்கழகப் பிரச்சினைகள் எனக்குத் தெரியும்.

இவர்கள் வெறும் கனவு, கற்பனையில் ஒரு கொள்கையை உருவாக்கிவிட்டு, அதை நடைமுறைப்படுத்த நினைப்பது ரொம்பவே தவறு.

புதிய கல்விக்கொள்கையில் ஒரே ஒரு நல்ல விஷயம் கூடவா இல்லை? 'ஐஏஎஸ், ஐபிஎஸ் போல, கல்வித்துறைக்கென ஐஇஎஸ் படிப்பு கொண்டுவரப்படும்' என்ற அறிவிப்பு இருக்கிறதே? பேராசிரியர் நியமனம் முதல் துணைவேந்தர் நியமனம் வரையில் இங்கே பணமும், அரசியலும் விளையாடுகிறது. அதைத் தடுக்க இந்த நடவடிக்கை உதவுமில்லையா?

ஆமாம், சமீப காலமாக இங்கே பேராசிரியர் முதல் துணைவேந்தர் நியமனம் வரையில் பணம் வாங்குகிறார்கள். பணம் கொடுத்து பதவிக்கு வருகிற துணைவேந்தர், தனக்குக் கீழ் உள்ளவர்களிடம் பணம் வாங்குகிறபோது அரசால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. கூட்டுக்கொள்ளை அடிக்கிறார்கள். அது நிர்வாகப் பிரச்சினை.

உயர்கல்வித்துறை நியாயமான பணி நியமனங்களைச் செய்து, இத்தகைய ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்பவர்களைப் பணி நீக்கம் கூட செய்யலாம். நிர்வாகப் பிரச்சினைக்காக கல்விக்கொள்கையையே மாற்ற வேண்டிய தேவை என்ன?

தற்போதைய நடைமுறைப்படி, ஒருவர் பல்லைக்கழகப் பதிவாளராக 3 ஆண்டுகள் தான் இருக்க முடியும். ஐ.இ.எஸ் படித்தவர்தான் பதிவாளர் என்றால், இனி ஒரே நபர் 20 ஆண்டுகள் வரையில் அந்தப் பதவியில் இருப்பார். இதனால் ஊழலும், முறைகேடும் மலிந்து போகும்.

கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் மாநில அரசுகள் மக்களின் வரிப்பணத்தில் கட்டுகின்றன. ஆனால், அதற்குத் துணைவேந்தரையும், பதிவாளரையும் நியமிக்கிற அதிகாரம் மத்திய அரசின் கைக்குப் போனால், அவர்கள் தங்களுக்கு வேண்டிய ஆட்களைப் பணியமர்த்துவார்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைக்காது. 2,000 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளாகும்.

இந்தியாவில் கல்விக்கொள்கை முழுமையாக மாற்றப்பட்டு 30 ஆண்டுக்கு மேலாகிறது. காலத்திற்கேற்ப புதிய மாற்றங்கள் தேவைதானே?

புதிய மாற்றங்கள் என்றால் ஏற்கலாம். இவர்கள் புதிது என்ற பெயரில் பழைய விஷயங்களை அல்லவா புகுத்தப் பார்க்கிறார்கள்? பெண்ணடிமை, மூடநம்பிக்கை, சாதிக்கொடுமைகள், தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்குக் கல்வி மறுப்பு போன்ற பழைய கள்ளை புதிய மொந்தையில் ஊற்றிக் கொடுக்கிறார்கள். நவீனத்தை நோக்கிப் போகாமல், இன்னமும் 'நாளந்தா, தட்சசீலம், வேதங்கள்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் எதிர்க்கிறோம்.

ஆரம்பக்கல்வி தாய்மொழியில் தான் பயிற்றுவிக்கப்படும் என்ற அறிவிப்பை கூடவா வரவேற்கக் கூடாது?

தமிழ்நாட்டில் தாய்மொழி வழிக்கல்வி ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிற விஷயம் தான். ராஜாஜி காலத்தில் ஆரம்பக் கல்வி வரையில் இருந்த தாய்மொழி வழிக்கல்வியை, காமராஜர் பியுசி வரைக்கும் கொண்டுவந்தார். கருணாநிதி ஆட்சியில் கல்லூரியிலும் தமிழ் வழி கல்வி கொண்டு வரப்பட்டது. 2006-ல் பொறியியல் கல்வியையும் தமிழ் வழியில் படிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது. இப்போது நீங்கள் எம்.இ. கூட தமிழ் வழியில் படிக்க முடியும்.

சரி, இந்தக் கல்விக் கொள்கையை வகுக்கிற குழுவில் நீங்கள் இருந்திருந்தால், என்னென்ன விஷயங்களைப் பரிந்துரைத்திருப்பீர்கள்?

நல்ல கேள்வி. நான் மட்டும் பெரிய மாற்றத்தைச் செய்துவிட முடியாது. ஆனால், கல்விக்குழுவில் முற்போக்கான ஆட்கள் இருந்தால், நிறைய முற்போக்கான பரிந்துரைகளைக் கொடுக்க முடியும். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரச் சொல்வோம். நுழைவுத்தேர்வுகளை நாடு முழுவதிலும் ரத்து செய்வோம்.

தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே நாடு முழுவதிலும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை கொடுப்போம். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டும் என்போம். பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் தன்னாட்சி அதிகாரம் கொடுப்போம்.

கல்லூரி நிர்வாகக் குழுவிலும், பாடத்திட்ட வடிவமைப்பிலும் மாணவர்களுக்கும் இடம் தருவோம். பாடத்திட்டங்களை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 'அப்டேட்' செய்வோம். தேர்வுகளை காலாகாலத்தில் நடத்துவோம். வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டங்களை ஏற்படுத்துவோம். பாடத்திட்டங்கள் அந்தந்த பகுதிக்கேற்ப தயாரிக்க வழிவகை செய்வோம்.

மும்மொழிக்கொள்கையில் இந்தி தான் படிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்கிறது மத்திய அரசு. வடமாநிலத்தவர்கள் தமிழைப் படிக்கவும் இதில் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். எந்த அடிப்படையில் இந்தித் திணிப்பு என்று சொல்கிறீர்கள்?

சரி அவர்கள் வழிக்கே வருகிறேன். தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கை இல்லை. உத்தரப்பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் 50 ஆண்டுகளாக மும்மொழிக்கொள்கை தானே நடைமுறையில் இருக்கிறது? அங்கே இதுவரையில் எத்தனை பேர் தமிழ் படித்தார்கள்? தாய்மொழியைத் தவிர இன்னொரு இந்திய மொழியைப் படிக்கலாம் என்று சொல்லிவிட்டு, அது இந்தி தான் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். இந்தியைத் தவிர மற்ற எந்தப் பாடத்திற்கும் ஆசிரியர் போட மாட்டார்கள், பிறகெப்படி படிக்க முடியும்.

உதாரணமாக, தமிழ்நாட்டில் ஒரு அரசு பள்ளியில் மாணவர்கள் மூன்றாவது மொழியாக வங்காளம் படிக்க விரும்பினால், இவர்கள் ஆசிரியர்களை நியமிப்பார்களா? இந்தி தான் படிக்க வேண்டும் என்பார்கள். இதெல்லாம் ஏமாற்று வேலை. எனவேதான் மும்மொழிக்கொள்கையே வேண்டாம் என்கிறோம். நாங்கள் இந்தி படிப்பதும் தேவையற்றது, உத்தரப்பிரதேசத்துக்காரர்கள் தமிழ் படிப்பதும் தேவையற்றது.

மத்தியில் ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு அந்த இடத்திற்கு இந்தியைக் கொண்டு வரும் முயற்சி நடக்கிறது. அவர்கள் அதிகாரத்தில் இருந்துகொண்டு, இந்தியில் ஆணை பிறப்பிப்பதைப் புரிந்து கொள்வதற்காக நாம் இந்தி படிக்க வேண்டும் என்பது திணிப்பு இல்லையா? நாம் ஆங்கிலம் படித்ததால்தான் இன்று உலகம் முழுவதும் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இந்தி படித்தவர்கள் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள். எப்படி என்கிறீர்களா? இந்தி பிரச்சார சபா வாயிலாக ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் இந்தி படிக்கிறார்கள், சிபிஎஸ்இ பள்ளிகளில் பலர் படிக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேருக்கு இந்தி பேசும் மாநிலங்கள் வேலைவாய்ப்பு தந்துள்ளன என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

திமுககாரர்களின் பிள்ளைகளும், பணக்காரர்களின் பிள்ளைகளும் இந்தி படிக்கிறார்கள். ஆனால், அரசு பள்ளியில் படிக்கிற ஏழைப் பிள்ளைகள் இந்தி படிக்கக் கூடாது என்பது நியாயமா என்ற கேள்விக்கு என்ன பதில்?

இந்தப் பிரச்சாரத்தை ரொம்ப நாளாகச் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் யாரும் இந்தி படிக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவே இல்லை. தங்களுக்குப் பிடித்தமான மொழியைப் படிக்க இங்கே எந்தத் தடையும் இல்லை. அண்ணாவே கூட இந்தியை படிக்க முயன்றவர் தான்.

'எட்டணா விலையுள்ள தமிழ் இந்தி சுயபோதனா என்ற புத்தகத்தைக் கொஞ்ச நாள் படித்தேன் தம்பி. நேரமில்லை, தேவையுமில்லை, அதனால் விட்டுவிட்டேன்' என்று அவரே தம்பிக்கு எழுதிய கடிதத்தில் சொல்லியிருக்கிறார்.

இந்தியைவிட ஆங்கிலம் நமக்கு நிறைய வாய்ப்பைத் தருகிறது என்பதால், அதற்கு முக்கியத்துவம் தருகிறோம். வேலை நிமித்தமாகவோ, மற்ற காரணமாகவோ வடமாநிலங்களுக்குச் செல்கிற பாமரர்களும் இந்தி படித்துக்கொள்கிறார்கள். இப்போது என்றில்லை, சுதந்திரத்துக்கு முன்பே நம்மவர்கள் காசிக்குப் போய்வருகிறார்கள். அவர்கள் எல்லாம் இந்தி படித்துவிட்டா போனார்கள்?

தமிழ் மக்களின் வரிப்பணத்தைத் தமிழுக்காகத்தான் செலவிடுவோம் என்று தான் அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கைதான் இருக்கும் என்று அண்ணாவே சொல்லிவிட்டார். அதுவே நடைமுறையில் இருக்கிறது.

அதிமுக அரசு கூட, மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டது. அவர்கள் மத்திய அரசின் இந்தப் புதிய கல்விக்கொள்கையை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.

தமிழால் உயர்ந்த தமிழருவி மணியன், சாலமன் பாப்பையா போன்றவர்களும் கூட தமிழக மாணவர்களை இந்தி படிக்க விடாமல் தடுத்தது தவறு என்று கருத்து கூறியிருக்கிறார்களே?

தன்னை இந்தி படிக்கவிடாமல் தடுத்தது திமுக தான் என்று தமிழருவி மணியன் சொல்லியிருப்பது பச்சைப் பொய். காரணம், 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழருவி மணியன் கல்லூரி படித்துக்கொண்டிருந்தார். எனவே, அவரது கூற்றை வழக்கம் போல புறந்தள்ளிவிடலாம்.

ஆனால், என்னுடைய நண்பர் சாலமன் பாப்பையா ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. ஒரு வேளை இந்தி தெரிந்திருந்தால், வடநாட்டில் போய் பட்டிமன்றம் பேசியிருக்கலாம் என்று நினைத்தாரோ என்னவோ?

இருவருக்கும் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் 1918-ல் இருந்தே இந்தி பிரச்சார சபை சார்பில் இந்தி சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விரும்புகிறவர்கள் அங்கே போய் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை. இவர் ஒருவர் இந்தி படிக்க விரும்புகிறார் என்பதற்காக அவரது வகுப்பில் உள்ள 50, 60 மாணவர்களும் ஏன் இந்தி படிக்க வேண்டும்?

முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனே எம்.பி. ஆன பிறகுதான் இந்தி படித்தார். 40, 50 ஆண்டுகளாக மேடையில் பேசிக்கொண்டிருக்கும் தமிழருவி, சாலமன் பாப்பையா போன்றவர்கள் நினைத்திருந்தால் வெறும் 6 மாதத்தில் இந்தி படித்திருக்க முடியும். சும்மா எதையாவது பேசக்கூடாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x