கீழூரில் உள்ள கல்வெட்டில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் முதல்வர் நாராயணசாமி.
கீழூரில் உள்ள கல்வெட்டில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி சுதந்திர தின நாளாக நவம்பர் ஒன்றாம் தேதியை அறிவிக்க நடவடிக்கை; முதல்வர் நாராயணசாமி

Published on

புதுச்சேரி சுதந்திர தின நாள் நவம்பர் 1 என்று அறிவிக்க நடவடிக்கை எடுப்போம் என்று சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டு ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுச்சேரி, இந்தியாவுடன் இணைவது தொடர்பாக புதுச்சேரி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி இதற்கான வாக்கெடுப்பு வில்லியனூர் அருகே உள்ள கீழூரில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர்.

இதையடுத்து, அக்டோபர் 21 அன்று புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளின் முழு அதிகாரத்தை இந்திய அரசுக்கு மாற்றும் ஒப்பந்தத்தில் பிரெஞ்சு அரசு கையெழுத்திட்டது.

நவம்பர் 1 அன்று இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், இது நடந்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்திய, பிரெஞ்சு நாடாளுமன்றங்கள் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தன. 1962 ஆகஸ்ட் 16 அன்று இந்த நான்கு பகுதிகளும் இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தன. 1963-ல் புதுச்சேரி இந்தியாவின் யூனியன் பிரதேசமானது. புதுச்சேரி மாஹே, ஏனாம், காரைக்கால் ஆகியவை புதுச்சேரி யூனியன் பிரதேச பிராந்தியங்கள் ஆகின. 2014 முதல் நவம்பர் 1-ஐ புதுச்சேரி அரசு விடுதலை நாளாகக் (Liberation Day) கொண்டாடிவருகிறது.

இந்த வரலாற்று நிகழ்வுக்கான வாக்கெடுப்பு நடந்த கீழூரில் 1974-ம் ஆண்டு புதுச்சேரி சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட தியாகிகளின் நினைவாக, தியாகிகள் நினைவு தூண் மற்றும் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.

இங்கு ஆண்டுதோறும் புதுச்சேரி, இந்தியாவுடன் இணைந்த தினத்தை நினைவு கூறும் வகையில் கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா நடைபெறுகிறது.

இன்று (ஆக.16) நடைபெற்ற விழாவுக்கு முதல்வர் நாராயணசாமி தலைமை வகித்து, தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினர் மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து விழாவில் தியாகிகளுக்குப் பொன்னாடை அணிவித்து முதல்வர் நாராயணசாமி கவுரவித்தார்.

காவல்துறையினர் மரியாதையை ஏற்றுக்கொள்ளும் முதல்வர் நாராயணசாமி
காவல்துறையினர் மரியாதையை ஏற்றுக்கொள்ளும் முதல்வர் நாராயணசாமி

இவ்விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "கரோனா தொற்றுக்காலம் என்பதால் மக்கள் பாதுகாப்பு கருதி எளிமையான முறையில் விழா நடைபெறுகிறது. நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரி மாநிலம் அதிகாரப்பூர்வ சுதந்திரம் பெற்ற நாள். அதில் சில குழப்பம் வந்ததால் குழு அமைக்கப்பட்டது.

கீழூரில் தேசியக்கொடியேற்றும் முதல்வர் நாராயணசாமி.
கீழூரில் தேசியக்கொடியேற்றும் முதல்வர் நாராயணசாமி.

அக்குழு இரு கருத்துகளை தெரிவித்துள்ளது. நவம்பர் 1-ம் தேதியை அக்குழுவினர், அரசு விடுதலை நாள் (liberation Day) எனவும், சுதந்திர நாள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அரசானது புதுச்சேரி சுதந்திர தினநாள் நவம்பர் 1 என்று அறிவிக்க நடவடிக்கை எடுப்போம். ஆங்கிலேயரிடமிருந்து ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரம் பெற்றதுபோல், பிரெஞ்சுகாரர்களிடமிருந்து புதுச்சேரி சுதந்திரமடைந்தது நவம்பர் 1-ல் தான்" என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in