Last Updated : 16 Aug, 2020 11:07 AM

2  

Published : 16 Aug 2020 11:07 AM
Last Updated : 16 Aug 2020 11:07 AM

மிக குறைந்த கல்விக் கட்டணம்: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர அழைப்பு

கோப்புப் படம்

கோவை

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.2,157 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இத்துடன் மடிக்கணினி, உதவித்தொகை, இலவச பயண அட்டை போன்ற அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுவதால், மாணவ, மாணவிகள் சேர்ந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை பாலசுந்தரம் ரோட்டில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியும், பீளமேடு அவிநாசி சாலையில் அரசு ஆண்கள் பாலிடெக்னிக் கல்லூரியும் உள்ளன. இக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுவருகின்றன. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மிக குறைந்த கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

இது குறித்து அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வி.ராஜேந்திரன் கூறியதாவது:

இங்கு சிவில், கணினி அறிவியல், எலெட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், இன்ஸ்ட்ரூமென்ட் அண்டு கன்ட்ரோல், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், கார்மென்ட் டெக்னாலஜி, மாடர்ன் ஆஃபிஸ் பிராக்டிஸ் ஆகிய 7 டிப்ளமோ படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதலாம் ஆண்டில் 380 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் http://tngptc.in, http://tngptc.com ஆகிய இணையதளங்கள் வழியாக பெறப்படுகின்றன.

ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.2,157 வீதம், மூன்று ஆண்டுகளுக்கு ரூ.6,471 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இத்துடன் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுக் கட்டணமாக ரூ.600-க்குள் செலுத்தினால் போதுமானது. மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளான கல்வி உதவித்தொகை, மடிக்கணினி, இலவச பேருந்து பயண அட்டை, பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

டிப்ளமோ படித்தவர்களின் தேவை தனியார் நிறுவனங்களில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் எங்கள் கல்லூரிகளில் படித்த மாணவிகள் பெரிய நிறுவனங்களில், நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாகவும் மாணவிகளுக்கு வழிகாட்டப்பட்டு வருகிறது.

டிப்ளமோ முடிப்பவர்கள் தொடர்புடைய இன்ஜினீயரிங் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து, அடுத்த 3 ஆண்டுகளில் இன்ஜினீயரிங் பட்டமும் பெற முடியும். எனவே, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆக. 20-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் கிடையாது. அவர்களுக்கு 25 இடங்கள் உள்ளன. இதேபோல தன் பங்களிப்பு மாணவிகள் விடுதி வசதியும் உள்ளது. கல்லூரியும், விடுதியும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது மாணவிகளுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x