

சுரங்கப் பாதை மெட்ரோ ரயில்பணியை முழுமையாக முடிக்காததால், ரஷ்யா மற்றும் மும்பை நிறுவனங்கள் அளித்துள்ள வங்கிஉத்தரவாதத்தை செயல்படுத்தி மெட்ரோ ரயில் நிர்வாகம் வங்கிகளில் இருந்து ரூ.143.28 கோடி பணம் எடுக்க தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இந்த உத்தரவை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை வழித்தடங்களில் ஷெனாய் நகர், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் கோபுரம், திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களை வடிவமைத்து, கட்டித்தருவதற்கான ரூ. 1,030.99 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை டிரான்ஸ்டன்னல் ஸ்டோரி என்ற ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து மும்பையைச் சேர்ந்த ஆப்கன்ஸ் என்ற தனியார் நிறுவனம் கடந்த2011-ல் எடுத்துள்ளது. இதேபோல வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், சென்ட்ரல்,எழும்பூர் ஆகிய மெட்ரோ சுரங்கப்
பாதை ரயில் நிலையங்களை கட்டித்தர ரூ. 1,566.81 கோடிக்கு இதே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஒப்பந்தத்தின்படி இந்த பணிகளை கடந்த 2015-க்குள் முடிக்காமல் 3 ஆண்டுகள் வரை காலம் தாழ்த்தியதாகவும், இப்பணியை முழுமையாக முடிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டிய மெட்ரோ ரயில் நிர்வாகம், இந்த நிறுவனங்கள் அளித்துள்ள வங்கி உத்தரவாதத்தின்படி மும்பையைச் சேர்ந்த யூனியன் வங்கியில் இருந்து ரூ. 25.77 கோடியையும், ஐடிபிஐ வங்கியில் இருந்து ரூ.117.51 கோடியையும் வசூலிக்க நடவடிக்கை எடுத்தது.
வங்கி உத்தரவாதத்தை செயல்படுத்தவும், வங்கியில் இருந்துபணம் எடுக்கவும் மெட்ரோநிர்வாகத்துக்கு தடை விதிக்கக்கோரியும், டிரான்ஸ்டன்னல் ஸ்டோரி நிறுவனமும், ஆப்கன்ஸ் நிறுவனமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தன. இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பாக நடந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி மற்றும் வழக் கறிஞர் டி.பலராமனும், மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன், மூத்த வழக்கறிஞர் யசோத் வர்தன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இந்த வழக்கைத் தொடர மனுதாரர்களுக்கு போதியமுகாந்திரம் இல்லை. எனவே வங்கி உத்தரவாதத்தை செயல்படுத்த தடை விதிக்க முடியாது” என மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். அதையடுத்து மனுதாரர்கள் தரப்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்ததால் ஒருவாரம் இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதையேற்ற நீதிபதி, இந்த உத்தரவை ஆக.21 வரை நிறுத்தி வைத்து தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் எனவும், ஒருவேளை அதற்குள்மனுதாரர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை எனில் வங்கி உத்தரவாதத்தின்படி மெட்ரோ ரயில் நிர்வாகம் வங்கியில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.