

தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 7-ம் கட்டமாக வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டு அவ்வப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கரோனா தடுப்பு பணிகள் ஆய்வு
செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், இந்த மாவட்டங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தலைமைச் செயலர் கே.சண்முகம் நேரில் சென்று கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
இதற்கிடையே, ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தின் 3-வது ஞாயிறான இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
ஆம்புலன்ஸுக்கு அனுமதி
அத்தியாவசியத் தேவைகளான பால் விநியோகம், மருத்துவமனை, மருந்தகங்கள், மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் இயக்கத்துக்கு மட்டும் அனுமதி உண்டு. மருத்துவ அவசரங்களுக்காக தனியார் வாகனங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதர வாகனங்கள் இயக்கம், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அநாவசியமாக வெளியே சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் ஏற்கெனவே உத்தரவுகள் இருக்கும் நிலையில்,கரோனா பாதிப்பு அதிகம் உள்ளமாவட்டங்கள், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.