

ஆவடியில் உள்ள இன்ஜின் தொழிற்சாலையில் கவச வாகனங்களை இயக்க தயாரிக்கப்பட்டுள்ள எரிபொருள் செலுத்தும் பம்ப் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் படைக்கல தொழிற்சாலைகள் வாரியத்தின்கீழ் செயல்படும் இன்ஜின் தொழிற்சாலையில், கவச வாகனங்களை இயக்குவதற்கு தேவையான 3 வகையான உயர்சக்தி டீசல்இன்ஜின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த இன்ஜின்கள் ராணுவத்தின் போர் பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆவடி இன்ஜின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் 3 வகை டீசல் இன்ஜின்களில் ஒன்றான யுடிடி-20 இன்ஜின், போர் வீரர்களை ஏற்றிச் செல்லும் சரத் கவச வாகனத்தை இயக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த இன்ஜினின் முக்கிய பாகமான எரிபொருள் செலுத்தும் பம்ப் இதுவரை இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ், இந்த பம்ப் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. படைக்கல தொழிற்சாலைகள் வாரிய தலைவர் ஹரிமோகன் இதை காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த பம்ப் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதன் மூலம், ஓர் இயந்திரத்துக்கு அரசுக்கு ஆகும் செலவில் ரூ.2.18 லட்சம் வரை மிச்சமாகிறது என இன்ஜின் தொழிற்சாலையின் பொதுமேலாளர் ஆர்.ஷியாம் சுந்தர் தெரிவித்தார்.