

மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கு தமிழக அரசு இ-பாஸ் விலக்கு அளிக்க வேண்டும் என்று வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு வரும்31-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் 75 சதவீதம் வரையில் ஊழியர்களை கொண்டு பணிமேற்கொள்ளலாம் என அரசு தளர்வு அளித்துள்ளது.
ஆனால் பேருந்துகள், ரயில்கள் ஓடாததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் திருமணம், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைக்கு இயக்கப்படும் வாகனங்களுக்கு இ-பாஸ் விலக்கு அளிக்க வேண்டுமென ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17-ம் தேதி சில தளர்வுகள்
இதுதொடர்பாக தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜூட்மேத்யூ கூறும்போது, “இ-பாஸ் முறையில் வரும் 17-ம் தேதி முதல் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
கரோனா பாதிப்பால் கடந்த 6 மாதங்களாக வாடகை வாகனங்கள் ஓடாததால் போதிய வருமானமின்றி அவதிப்பட்டு வருகிறோம். இதேபோல், பொதுமக்களும் அத்தியாவசிய சேவைகளுக்கு வாகன வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, தமிழகத்தில் மக்களின் அத்தியாவசிய சேவைக்கு இயக்கப்படும் வாகனங்களுக்கு இ-பாஸ் விலக்கு அளிக்க வேண்டும்’’என்றார்.