

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சியர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.
காஞ்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் பொன்னையா கொடி ஏற்றிவைத்தார். இதைத் தொடர்ந்து காவல் துறை மற்றும் ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து கரோனா காலத்தில் சிறந்த பணியாற்றிய பல்வேறு துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் 24 பேருக்கு ரூ.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் காஞ்சி சரக காவல் துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சார் ஆட்சியர் செ.சரவணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தர், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் முதல் விழா
செங்கல்பட்டு மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட பின்னர், அரசு தொழிற்பயிற்சி மைய மைதானத்தில் நடைபெற்ற முதல் சுதந்திர தின விழாவில், ஆட்சியர் ஜான் லூயிஸ் கொடி ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து காவல் துறை மற்றும் ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவில் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சுதந்திர போராட்டத் தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.
மேலும் 61 பயனாளிகள், 775 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், வருவாய் அலுவலர் பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வம், லட்சுமிபிரியா, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
125 பேருக்கு பாராட்டு
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், ஆட்சியர் மகேஸ்வரி கொடி ஏற்றிவைத்து, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 125 பேருக்கு கரோனாதொற்றில் இருந்து மீண்டு, சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், வருவாய் அலுவலர் முத்துசாமி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.