

சென்னை புழல் மத்திய சிறையில், கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 50 படுக்கைகள் கொண்ட கரோனா பராமரிப்பு மையம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் மையத்தை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்காக 1,29,122 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 1,643 பராமரிப்பு மையங்களில் 72,640 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 54 மையங்களில் 15,932 படுக்கைகள் உள்ளன. புழல் சிறையில் 2,014 கைதிகள் உள்ளனர். புழல் சிறை மற்றும் கிளை சிறைகளில் கைதிகளுக்கு ஏற்படும் உடல் நல குறைபாடுகளுக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆக்சிஜன் சிலிண்டர்
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 114 சிறைக் கைதிகள் அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் புழல் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 99 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக தற்போது புழல் சிறை வளாகத்தில் 50 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா பராமரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 3 ஆண் வார்டுகளும், ஒரு பெண் வார்டும் உள்ளன.
இங்கு நடமாடும் எக்ஸ்ரே கருவி, இசிஜி, அல்ட்ரா சவுண்ட், ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகள் உள்ளன. சுழற்சி முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைவர் சுனில் குமார் சிங், சென்னை சரக சிறைத்துறைத் துணைத்தலைவர் ஆ.முருகேசன், புழல் மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் மா.செந்தில்குமார், கோ.பா.செந்தாமரைக்கண்ணன், மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர்.நாராயணபாபு, அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.