Published : 16 Aug 2020 07:18 AM
Last Updated : 16 Aug 2020 07:18 AM

150 நாட்களாக வழக்குகளின் தேக்கம் அதிகரிப்பு; நீதிமன்றங்களை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தல்

கடந்த மார்ச் மாதம் முதல் 150 நாட்களுக்கும் மேலாக வழக்குகளின் தேக்கம் அதிகரித்துள்ளதால், உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஊரடங்கை காரணம் காட்டி கடந்த 150 நாட்களுக்கும் மேலாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையும் வழக்கமான நடைமுறையில் இயங்கவில்லை. இதனால் வழக்குகளின் தேக்கம் அதிகரித்துள்ளது. அத்துடன் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 262 வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது காணொலிக் காட்சி மூலமாக விசாரணை நடைபெறுவதால் பல வழக்கறிஞர்கள் தொழில்நுட்ப கோளாறு மற்றும் போதிய வசதியின்மை போன்ற காரணங்களால் வழக்கு விசாரணையின்போது முழுமையாக ஆஜராக முடியவில்லை.

எனவே, உயர் நீதிமன்றத்தை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடைபெறாத சூழலில் குடும்ப நல நீதிமன்ற வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள் என பல்வேறு வழக்குகளில் பொதுமக்கள் போதிய நிவாரணம் பெற முடியாமலும் தீர்வு கிடைக்காமலும் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே, உடனடியாக நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி பார் கவுன்சில் சார்பில் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளோம். இந்தக் கோரிக்கையை பரிசீலித்து உடனடியாக நீதிமன்றங்களை முழுமையாக வழக்கமான செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பார் கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜாகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x