

கோயில் பணியாளர்களுக்கு 3-வது முறையாக ரூ.1,000 நிதிஉதவி வழங்க உத்தரவிடப்பட் டுள்ளது. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சார்நிலை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கரோனா ஊரடங்கால்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை உதவி தொகையாக ரூ.1,000, ஏப்ரல் 16முதல் மே 15 வரை ரூ.1,000 வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மே 15-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதி வரை ஒன்றரை மாதகாலத்துக்கு கோயில்களில் தட்டுகாணிக்கையை மட்டுமே பெறும்அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், பங்குத் தொகை மட்டுமே பெற்றுக்கொண்டு பணிபுரியும் நாவிதர், பண்டாரம், பண்டாரி, மாலைகட்டி, பரிச்சாரகர், சுயம்பாகம், வில்வம், காது குத்துபவர், மிராசு கணக்கு, கங்காணி, திருவிளக்கு, முறைக்காவல், மேளம், நாதஸ்வரம், குயவர், புரோகிதர், தாசநம்பி போன்ற பணியாளர்கள் மற்றும் ஒரு காலபூஜை நிதியுதவி பெறும் கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தலா ரூ.1,500-ஐ அந்த கோயில் நிதியில் இருந்து வழங்க வேண்டும்.
மேலும், இதுவரை பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படாத கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஜூலை 1 முதல் ஜூலை 31 வரையிலான காலகட்டத்துக்கு உதவி தொகையாக தலா ரூ.1,000 வழங்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.