Published : 16 Aug 2020 07:01 AM
Last Updated : 16 Aug 2020 07:01 AM

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் கருத்தால் சர்ச்சை; ஓபிஎஸ், இபிஎஸ் இடையே அமைச்சர்கள் சமாதான முயற்சி: கட்டுப்பாட்டை மீறுவோர் மீது நடவடிக்கை என எச்சரிக்கை

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே சமாதான முயற்சியில் அமைச்சர்கள் நேற்று ஈடுபட்டனர். இதையடுத்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒருங்கிணைப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள்இணைந்த பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும் ஆட்சியில் துணைமுதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. முதல்வர் பழனிசாமி, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரானார். இருவரும் இணைந்து செயல்படுவதாக கூறப்பட்டு வந்தாலும், கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோஷம் அதிமுகவில் அவ்வப்போது எழுந்து வந்தது.

நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர்கள் தேர்வு என அனைத்திலும் தங்கள் தரப்புக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற ஆதங்கம் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வியின் மூலம்மீண்டும் அதிமுகவில் குழப்பம் தொடங்கியுள்ளது.

அமைச்சர்களின் மாறுபட்ட கருத்து

தேர்தல் முடிந்து எம்எல்ஏக்களால் சட்டப்பேரவை கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே முதல்வர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூற, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, முதல்வராக பழனிசாமியை முன்னிறுத்தி களம் காண்போம் என்றார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் முதல்வர் பழனிசாமியை முன்னிலைப்படுத்தி பேசினார்.

அமைச்சர் டி.ஜெயக்குமாரோ, ‘‘அமைச்சர்கள் கூறுவது அவர்களது தனிப்பட்ட கருத்து. அது கட்சியின் கருத்தல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலையை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திப்போம். முதல்வர் யார் என்பதை அப்போது முடிவெடுப்போம்’’ என்றார். ‘‘யார் முதல்வர் வேட்பாளர் என்பதை கட்சி நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்’’ என்று துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி தெரிவித்தார். அமைச்சர்களின் இந்த கருத்துகளால் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், அடுத்த முதல்வர் ஓபிஎஸ்தான் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் தேனியில் நேற்று ஒட்டப்பட்டன. இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயம் அமைச்சர்கள் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், கடம்பூர் ராஜூ, வீரமணி உள்ளிட்ட 14 அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். பின்னர் ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று 11.30 முதல் 1 மணிவரை ஆலோசனை நடத்தினர்.

சுவரொட்டி விவகாரம், ஓபிஎஸ்தரப்பின் அதிருப்தி, முதல்வர் வேட்பாளர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது கட்சியின் நலன்கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களிடம் தனது கருத்தை ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதன்பின் மூத்த அமைச்சர்கள் முதல்வர் வீட்டுக்கு சென்றுஆலோசனை நடத்தினர். ஓபிஎஸ்தெரிவித்த கருத்துகளை முதல்வரிடம் கூறினர்.

பகல் 2 மணிக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், காமராஜ் ஆகியோர்மீண்டும் ஓபிஎஸ் வீட்டுக்கு வந்துமுதல்வர் அளித்த ஆலோசனைகளை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து 2-வது முறையாக முதல்வரை அமைச்சர்கள் சந்தித்தனர். இந்த அவசர சந்திப்புகளால் காலை11.30 முதல் பிற்பகல் 3 மணி வரை கிரீன்வேஸ் சாலை பரபரப்பாக இருந்தது.

இதற்கிடையே, ஓபிஎஸ் வீட்டின்அருகில் குவிந்த அவரது ஆதரவாளர்கள், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். அதன்பின், நிர்வாகிகள் வந்து அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். மேலும், ஓபிஎஸ் உத்தரவின்பேரில் தேனியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும் அகற்றப்பட்டன.

குழப்பங்களுக்கு பின்னணி

அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு பல்வேறு பின்னணிகள்கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதை முதல்வர் தரப்பினர் விரும்பவில்லை என்றும், அதனால் அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்ஸை முன்னிலைப்படுத்த பாஜக முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பாஜகவின் இந்தமுயற்சி அதிமுகவில் பிளவை ஏற்படுத்திவிடும் என 2-ம் கட்ட தலைவர்கள் கருதுகின்றனர். இதனாலேயே இந்த சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

கூட்டறிக்கை வெளியீடு

இந்நிலையில், நேற்று மாலை ஓபிஎஸ் - இபிஎஸ் பெயரில் கூட்டறிக்கை ஒன்று வெளியானது. அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 4 ஆண்டுகளாக அதிமுகவையும், ஆட்சியையும் எப்படி வழிநடத்தினோமோ அதேபோல, இனிவரும் காலங்களிலும் சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடர் வெற்றியைப் பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரம் இதுவாகும்.

கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகளில் சிலர் எந்தப் பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துகள் மாற்றாருக்கு பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டன. அத்தகைய நிலை மீண்டும் ஏற்படாத வண்ணம் ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போல் ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.

கட்சியின் அனைத்து முக்கியகொள்கை முடிவுகளையும், கூட்டணி குறித்த நிலைப்பாடுகளையும், ஜனநாயக ரீதியில் கட்சியின் தலைமை விரிவாக ஆலோசித்து, தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் மேற்கொள்ளும். எனவே, சிறு சலசலப்புகளுக்கும் இடம் தராமல் மக்கள் பணிகள், கட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.

அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கட்சிப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, தலைமையின் ஒப்புதல் இல்லாமல், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறுஅவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x