Published : 15 Aug 2020 08:19 PM
Last Updated : 15 Aug 2020 08:19 PM

மேட்டூர் அணை, சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கம்: ஆக.18 முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு

விவசாய மக்கள் பாசனத்திற்கு நீர் திறந்துவிட வைத்த கோரிக்கை ஏற்று மேட்டூர் அணையிலிருந்தும், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பு வருமாறு:

மேட்டூர் அணை:

மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும்படி, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்ட வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக ஆகஸ்டு 18 முதல் டிசம்பர் 31/2020 வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

திருநெல்வேலி பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 7 கால்வாய்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 கால்வாய்களின் கீழூள்ள பயிர்களை காக்கவும் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாய பெருமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாய பெருமக்கள் கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய் மற்றும் திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக் கால்வாய் மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய் ஆகியவற்றின் மூலம் பாசன வசதி பெறும் கால்வாய் பகுதிகளில் உள்ள பயிர்களை காக்கவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும், இதர பயன்பாட்டிற்கும், சிறப்பு நிகழ்வாக, பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து ஆகஸ்டு 18 முதல் ஆகஸ்டு 31 வரை 1693.44 மி.கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

மேற்கண்ட கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பொது மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x