

ஜப்பானில் இறந்த இளைஞர் உடல், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எடுத்த முயற்சியால் 15 நாட்களுக்குப்பின் இன்று சென்னை வருகின்றது. உறவினர்கள் உடலைப்பெற்றுக்கொள்கிறார்கள்.
இதுகுறித்து மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு:
“திருத்தணியைச் சேர்ந்த மாதவ் கிருஷ்ணா என்ற இளைஞர், ஜப்பான் நாட்டில் வேலை பார்த்து வந்தார். திடீர் உடல் நலக்குறைவால் ஜூலை 29-ம் நாள் ஜப்பானிலேயே உயிரிழந்தார். ஜப்பான் நாட்டுச் சட்டப்படி, அவரது உறவினர்கள் யாரேனும் ஜப்பானுக்கு வந்து, உடலை அடையாளம் காட்டி, பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, ஜப்பான் காவல்துறையினர் கூறினர்.
இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு வான் ஊர்திகள் இல்லை என்பதைக் கூறி, அவருடைய நண்பர்கள் உடலை அடையாளம் காட்டுவார்கள் என்றும், அவர்களிடம் ஒப்படைக்குமாறும் குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளையும் ஜப்பான் காவல்துறையினர் ஏற்கவில்லை.
இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இது தொடர்பாக, வைகோ , வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகத்தையும் தொடர்பு கொண்டார்.
தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக, ஆகஸ்ட் 6-ம் தேதி, உடலைத் தருவதற்கு, ஜப்பான் காவல்துறையினர் இசைவு தெரிவித்தனர். மாதவ் கிருஷ்ணா உடல், நேற்று டோக்யோவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் வான் ஊர்தியில் ஏற்றப்பட்டு, கத்தார் நாட்டின் தலைநகர் டோகா போய்ச் சேர்ந்தது.
இன்று (15.8.2020) மாலை 7 மணிக்கு சென்னை வந்து சேரும் என, அயல் உறவுத் துறை அமைச்சகம், வைகோவுக்கு தகவல் தெரிவித்தது. மாதவ் கிருஷ்ணாவின் உடல் இன்று இரவு சென்னைக்கு வருகிறது. அவரது குடும்பத்தினர் உடலைப் பெற்றுக் கொள்கின்றார்கள்”.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.